Pages

Friday, April 11, 2014

தமிழன்பன் --80








                  
சென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் 8/4/14 ஆஅன்று நடத்திய
தமிழன்பன் அவர்களின் எண்பதாம் பிறந்தநாள் பெருமங்கலவிழாவின் போது வழங்கப்பெற்ற வாழ்த்துரை




செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார் அவர்களின்
     நூற்றாண்டு நிறைவுவிழாவில்
தமிழர் தலைவர் வீரமணி அவர்களிடமிருந்து
பாவலர்  ஈரோடு தமிழன்பன் அவர்கள்
இலக்குவனார் விருது பெறுகிறார்

தமிழன்பன் --80
 ஈரோட்டுப் பாவலரை
கவிதைப் பெரியாரை
எங்கள் பேராசிரிய அண்ணாவை
படிமக் கலைஞரை
வாழ்த்துவது நம் கடமை.
வாழ்த்துவதற்கு வயது போதாது என்று சுணங்குபவர்கள்
சாப்பிடுவதற்குப் பற்கள் இல்லை என்று தயங்கியது உண்டா?
வயது வாழ்நாளை வரையறுக்கும் காலக்கூறு மட்டுமே.
வாழ்த்துவதற்குரிய அடிப்படைத் தகுதிகள்
நல்ல உள்ளமும் நயமிகு நட்பும்
உள்ளார்ந்த ஈடுபாடுமே
வாழ்த்தா?தமிழன்பன் அவர்களுக்கா?
இதோ நாங்கள் இருக்கிறோம் என்று
வார்த்தைகள் ஆயிரம் வரிந்துகட்டிக்கொண்டு
விரைந்து முன்வந்தன.
அரசு அலுவல் நிமித்தம் அடிக்கடி
வெளியூர் சென்றுவரும் தந்தை
வீடுதிரும்பும் வேளையில் அவர்பெற்ற
மழலைப் பட்டாளம்
முந்திக்கொண்டு ஓடிவருவதைப் போலவே.
வரிந்துகட்டிக்கொண்டு
விரைந்து முன்வந்தன  வார்த்தைகள்.
போதாத வேளைகளில்
குழந்தைகளுக்குப் பொருளோ பண்டமோ
வாங்குவதற்குக் கையில் காசும்
கடைக்குச் செல்ல நேரமும் போதாத வேளைகளில்
வெறும் பையுடன் திரும்பிவரும் தந்தை
வருந்திக் குமைவதைப் போன்றே
நானும் வருத்தப்பட்டேன்.
கற்பனைநயமும் கருத்துச் செறிவும்
கவிதைக் கலைநுணுக்கமும்
கைவசம் இல்லையே
எப்படிப் பாடுவது?
மிடுக்கான சொல்லடுக்கு
இடுக்கண் களையுமா?
எண்ணிப் பார்த்தேன்.
‘பாடமுடியாவிட்டால் என்ன?
ஆடலாமே!
நெஞ்சம் நிறைந்த நேசமும்
அன்பும் அளவற்ற பாசமும்
கொண்டு ஆடலாமே!
கொண்டாடலாமே!
தமிழன்பன் அவர்களின்
எண்பது ஆண்டுநிறைவைக்
கொண்டாடவேண்டிய வேளையல்லவா?’
என ஆறுதல் பெற்றேன்.
சென்னிமலை உலகிற்கு வழங்கிய தமிழ்மலையை
மறைமலை வாழ்த்துவதிலும் பொருத்தம் உண்டல்லவா?
கருணைக் கடலாய் உரிமைப் பிழம்பாய்த் திகழ்ந்த
அன்னை வள்ளியம்மாளின் அன்பும் அரவணைப்பும்
கவிஞரின் எட்டாவது வயதிற்குமேல் எட்டாமல்போனது.
வளர்ப்புத் தாயுமானவர்
பொன்மனம் கொண்ட தமையனார் தங்கவேலர்
ஞானத்தாயாக விளங்கிய கரந்தைத்தமிழ்க் கல்லூரியில்
தமிழ்த்தாயாகத் திகழ்ந்தவர் புலவர் இராமநாதனார்.
தாயாராகவும் தமையனாராகவும் நண்பராகவும்
சீராட்டிப் பாராட்டிப் போற்றிப் புரந்தவர்
சிலம்பொலி செல்லப்பனார்.
செவிலித் தாயாகச் செல்லத் தமக்கையாகக்
கவிஞரைப் பேணித் திருமணம் நடத்திவைத்துச்
சாந்தகுமாரி –செகதீசன் வாழ்விணையரை
வையகம் போற்றச் செய்தவர்
திருமதி செல்லம்மாள் செல்லப்பன அவர்களே.
அந்தத் தம்பதிகளின் சாதனை
(சிலம்பொலி—செல்லம்மாள்)                  
அந்த வாழ்விணையரின் அருஞ்செயல்
தமிழ் இலக்கிய வரலாற்றில்
ஒரு புதிய திருப்பத்தை வழங்கியது.
இந்தத் தம்பதிகளின் சாதனை
இந்த வாழ்விணையரின் அருஞ்செயல்
தமிழ்நாட்டின் வரலாற்றையே மாற்றியமைத்தது.
இவர்கள் இருவரும் இணைந்துதான்
பாரதிதாசனை அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தனர்.
பாபுலோ நெரூடோவைத் தமிழகத்தில் பணியாற்றச் செய்தனர்.
தமிழ் இலக்கிய வரலாற்றில்
ஈரோடு மதரசா உயர்நிலைப்பள்ளிக்குத் தனியிடம் உண்டு.
சென்னிமலை செகதீசனை ஈரோடு தமிழன்பனாக
உலகிற்கு அறிமுகப் படுத்திய பெருமை
ஈரோடு மதரசா உயர்நிலைப்பள்ளிக்கே உரியது.
சென்னைப் புதுக்கல்லூரி இவருக்குப் பேராசிரியர் பதவி வழங்கியது.
இவர் தமிழ்நாட்டுக்குப் பல
திரைப்பட இயக்குநர்களையும் கலைஞர்களையும்
கல்லூரிப் பேராசிரியர்களையும்
ஆட்சிப்பணியாளர்களையும்
கணக்கின்றி வழங்கினார்.
சென்னைத் தொலைக்காட்சி நிலையம்
இவருக்குச் செய்தி வாசிப்பாளர் பணி அளித்தது.
இவர் செய்திகளைப் படித்தது அதிகமா?
செய்திகள் இவரிடம் செந்தமிழ் படித்தது அதிகமா?
ழகர ளகர லகர வேறுபாடுகளும்
ணகர ‘ன’கர நகர வேறுபாடுகளும் அறியாமல்
தமிழை ஒலிக்கத் தெரியாமல் ஒழிக்க முனைந்த
கல்லூரி மாணவர்களுக்கெல்லாம்
ஆசிரியர்கள் வழங்கிய ஒரே அறிவுரை.
“தமிழன்பன் செய்தி வாசிப்பதைக் கேள்
அவர் அழுத்தம் திருத்தமாகத் தமிழை ஒலிப்பதைப் பார்.
மீண்டும் மீண்டும் அவர் தமிழை ஒலிக்கும் முறைமையை
மனத்தில் இருத்திப் பயிற்சிகொள்” என்பதே.
ஆங்கிலச் செய்திவாசிப்பில் மெல்வில் டி மெல்லோ போல்
தமிழ்ச்செய்தி வாசிப்பில் தமிழன்பன் தடம் பதித்தார்.
கலைநிகழ்ச்சியைக் காண்பதற்குக் காட்டும் ஆர்வத்துடனே
தொலைக்காட்சிச் செய்தியைக் கேட்கவும்
ஆர்வம் காட்டியோர் ஆயிரமாயிரமாய்ப் பெருகினார்கள்.
பொறாமையால் பொசுங்கிப் போனவர்கள்
அந்தப் பதவியைப் பறித்தார்கள்.
இலங்கை வானொலி மயில்வாகனர் போலச்
சென்னைத் தொலைக்காட்சியில் தமிழன்பன் என்று
வரலாற்றில் அவர் பெற்ற இடத்தைப் பறிக்கமுடியவில்லை.
தமிழ்நாட்டு அரசு தனது சார்பாகச்
சாகித்திய அக்காதெமிக்குத்
தமிழன்பன் அவர்களை அனுப்பிவைத்த்து.
சாகித்திய அக்காதெமியின்
கோணல்தராசுமுள்ளைச் செப்பனிட்டார்.
சிறந்த ‘நூலு’க்குப் பரிசு
என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தவர்களுக்கு
நூல் என்றால் ‘புத்தகம்’என்று பொருள்
எனப் போதித்தார்.
உயர்ந்த படைப்புகளின் உண்மைநிறையை
எடைபோட்டுப் பார்க்கும் பழக்கம் தொடங்கியது.
தமிழ்க்கவிதை என்பதே
சாகித்திய அக்காதெமியின் கண்ணுக்குத் தெரியாமல் இருந்த்து.
அக்காதெமியின் பழுதுபட்ட பார்வையைச் செப்பனிட்டார்.
அப்துல் ரகுமானும்
அதன்பின் பலரும் விருது பெற்றனர்.
‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில்
இடம் வழங்கப்பெறாமல் நுழைவு மறுக்கப்பட்டிருந்த
திராவிட இலக்கியச் சிற்பிகளும்
பொதுவுடைமை இலக்கியப் படைப்பாளிகளும்
‘ஆலயப் பிரவேசம்’ செய்தனர்.
நந்திகளை விரட்டினார்
நந்தனார்களை அரியணையேறச் செய்தார்.
இலக்குவனாரும் இராசமாணிக்கனாரும்
சிதம்பரநாதனாரும் சீனிவாசனாரும்
ஆற்றிய தமிழ்ப்பணிகள்
நூலாக்கம் பெற்றன.
சீவானந்தமும்,கே.சி.எசு.அருணாசலமும்
பொதுவுடைமைச் சிந்தனையாளர் பலரும்
அக்காதெமியின் இலக்கியப்பேழைகளில்
இடம்பெறலாயினர்.
அக்காதெமியின் பணிகளுக்கு
அவர் வகுத்த புதுப் பாதையே
நல்லவழிகாட்டிக் கொண்டிருக்கிறது இன்றளவும்.
எத்துணை  எத்துணைத் துறைகள் உளவோ
அத்துணைத் துறைகளிலும் ஆற்றல்சால் அறிஞராய்த்
தோன்றிற் புகழொடு தோன்றுக என்னும் வள்ளுவன் வாக்குக்கு
மாண்பார் எடுத்துக்காட்டாய்த் தமிழன்பன்
வரலாறு படைத்துவருகிறார்;
மாணவர்கள் மனங்கவர்ந்த பள்ளி ஆசிரியர்,
பல்துறை வித்தகர்களை உருவாக்கிய கல்லூரிப் பேராசிரியர்
“தமிழன்பன் நல்ல தமிழ்க்கவிஞர் வாழ்க
தமிழன்பு மேலும் தழைத்து”
எனப் பாவேந்தரால் பாராட்டப்பட்ட பாவேந்தர் மரபுக் கவிஞர்,;
‘முழுப்பாட்டும் சுவைப்பாட்டே வாழ்க தோழர்
முன் தோன்றும் காலமிவர் காலமாகும்’
எனக் கவியரசர் கண்ணதாசனால் கொண்டாடப்பட்ட
கவியரங்கக் கவிஞர், இவர்தம் கவியரங்கக் கவிதையின்
கருத்து மின்னல்கள்
கைதட்டல் இடியை இடிக்கச் செய்து
உள்ளம் நிரம்பக்
கருத்துமழை பொழியும்.
புதுக்கவிதைத் துறையில் இவர் ஈடுபட்டபின்னர்
அதுவரை அச்சுறுத்திக் கொண்டிருந்த
மணிப்பிரவாளப் பேய் ஓடிப்போய்விட்டது.
சோகைபிடித்த சொல்லாட்சியும்
வெட்டுப்பட்டு குத்துப்பட்டுக்
குற்றுயிராய்ச் சுருண்டுபோன
 தொடர்களும்
விடைபெற்றன.
வெளிநாட்டுக்காரர் வாந்தியை
ஏந்திப்பிடித்து  ஏடுகளில் பதித்து
விளக்கம் வழங்கிக் கொண்டிருந்த ‘மேதை’கள்
விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டார்கள்.
“சிறுகதை ஆசிரியர்,
புதின ஆசிரியர்,
நாடக ஆசிரியர்,
சிறார் இலக்கியப் படைப்பாளி,
வாழ்க்கை வரலாற்றாசிரியர்,
திறனாய்வாளர்,
கட்டுரையாளர்,
ஓவியர்,
சொற்பொழிவாளர்,
திரைப்பட இயக்குநர்,
திரைப்பட பாடலாசிரியர்”
என விவரித்துச் சொல்லவேண்டாம்.
‘மானுடத்தின் முகவரி தமிழன்பன் படைப்புகள்’
என ஒற்றைவரியில் ஓங்கிச் சொல்ல்லாம்.
‘இருபத்தொன்றாம் நூற்றாண்டின்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை’என்றும் இவரைக் குறிப்பிடலாம்.
அந்த மகாவித்வான் தமிழ்நாட்டுத் தலங்களையெல்லாம்
பாட்டில் பதியவைத்தார்.
இந்த மாக்கவிஞர்
உலகவரைபடத்தில் தான் பயணம்செய்து
பார்த்த நகரங்களின் வரலாற்றையும்
அவை மனிதஇனத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கினையும்
வரலாற்றுநோக்கில் ஆவணப்படுத்தினார்.
திரைகடலோடியும் திரவியம் தேடு என்பார்கள்.
இவர் திரைகடலோடிப் புதுப்புதுக் கருப்பொருள் தாங்கிய
கவிதைகளைத் தமிழுக்குத் திரவியமாக வழங்கினார்.
‘தமிழன்பன் கவிதைகள்’
வாசகர் உள்ளத்தில் ஏற்படுத்திய ‘சிலிர்ப்புகள்’(1970) 
மதிப்பீடுகள்(2002) எவற்றாலும் அளக்கமுடியாதவை.
கவியரங்கங்களில் அலைமோதும் சுவைஞர்வெள்ளத்தை நீந்தி
அந்தப் பாட்டுத் ‘தோணி வருகிறது’என்றால் 
கேட்டுக் கிறுகிறுத்துப் போவதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்?
சமூகப்புன்மைகளைச் சுட்டெரிக்கும் ‘சூரியப் பிறைகள்’
அவரின் சுடர்மிளிரும் கவிதைகள்.
உண்மை அறியாதவர்கள்’ஊமை வெயில்’ என்று அஞ்சி ஒதுங்கக்
 ‘குடை ராட்டினம்’ உதவுமா?
‘அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்’
அவரின் கனல்மணக்கும் கவிதைகளில்
ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்கப் போர்க்குரல் முழங்கும்
.‘காலத்திற்கு ஒரு நாள் முந்தி’த்
‘திரும்பி வந்த தேர்வலம்’
‘வணக்கம் வள்ளுவ!’ என வாழ்த்துவதற்குத்தானே!
‘மின்னல் உறங்கும் போது’
‘கதவைத் தட்டிய பழைய காதலி’
’சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள்’அவரது கவிதைத் தலைவிகள்
என்பதை அறிந்ததும் வெளியேறிவிட்டாள்.
‘கண்ணுக்கு வெளியே சில கனாக்கள்’ கண்டதனால்
‘கனாக்காணும் வினாக்கள்’ எழுச்சிபெற்று
‘விடியல் விழுதுகள்’ வழங்கிய வித்தகத்தை
அவர் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
பாரி முல்லைக்கு அருள்புரிந்தான்.
ஆயின் ‘என் வீட்டுக்கு எதிரே ஓர் எருக்கஞ் செடி’ என
உள்ளம் உருகப் பாடிய பாவலர் ஈரோடு தமிழன்பன் ஒருவரே.
‘நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும்’
அவரிடம் ‘சொல்ல வந்தது’என்ன?
‘தீவுகள் கரையேறுகின்றன’ என்பதையா?
‘பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்’
‘பாப்லோ நெருதா பார்வையில் இந்தியா’என்று
‘இவர்களோடும் இவற்றோடும்’
அவரது எழுத்துப்பணி இணையற்ற பாதையில்
பெருமிதத்துடன் பீடுநடையிடுகிறது.
‘அணைக்கவா என்ற அமெரிக்கா’ குறித்து
ஆயிரம்பேர் பாடியுள்ளனர்.
ஆனால்
’உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்.... வால்ட் விட்மன்’
எனத் தோழமையுடன் பாடியவர் தமிழன்பனேயாவர்.
‘கவின் குறு நூறு’ படைப்பதற்கு
 ‘ஓலைச்சுவடியும் குறுந்தகடும்’ அவருக்குத் தேவையா?
உங்கள் கவிதைகளில் ஒருமுறையாவது
எங்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்பதே
அவரிடம் ‘வார்த்தைகள் கேட்ட வரம்’.
‘பாரதிதாசன் நெறியில் பாப்புனையத் தொடங்கிப்
புலமையும் படைப்பாற்றலும் ஒருங்கிணைந்தமையால்
புதிய பல கவிதைக்கலைநுணுக்கங்களைத்
தமிழில் அறிமுகப்படுத்திய படிமச்சிற்பி தமிழன்பன்’
எனக் கலாநிதி கைலாசபதி தெள்ளிய முடிபுரைத்தார்.
‘சமகாலக் கவிஞருள் முதல்நிலைக் கவிஞர்’என
மொழிந்தார் கலாநிதி கா.சிவத்தம்பி.
‘இவரது நூல்கள் முழுமையும் படித்தால்
நான் இன்னொரு பாரதிதாசனையே காண்கிறேன்”
எனக் கருத்துரைத்தார் நம் இனமானப்பேராசிரியர் அன்பழகனார்.
தமிழன்பனாரின் பாடல்திறத்தின் பல மாண்புகளை விளக்கி
ஆங்கிலப்பேராசிரியர்களும் தமிழ்ப்பேராசிரியர்களும்
அடுக்கடுக்காய்ப் பல நூல்கள் படைத்துள்ளனர்.
அவற்றைக் கூற நேரமில்லையே.
தமிழன்பனாரின் கவிதைநூல்களை
உலகப்பல்கலைக்கழகங்களெல்லாம்
கவனத்தில் கொண்டு கற்கத் தொடங்கிவிட்டன
ஐக்கூ,லிமரைக்கு,சென்றியூ,கசல்
எனப்பல வெளிநாட்டுப் பறவைகளெல்லாம்
வந்திறங்கிப் புத்துணர்ச்சி பெறும் இந்தக்
கவிதைத் தடாகம்
இலக்கிய உலகின் ஊருணி.
வேறு நாடுகளில் காணக்கிடைக்காத புதுமை.
உலகமயமாதல் எனும் கோட்பாட்டுக்குப்
படைப்பாக்கநெறியில் இப்படி ஒரு விளக்கமா?
என்று உலகம் பாராட்டுகிறது.
மொழித்திரைகளை விலக்கித்
தமிழன்பனாரின் கவிதைச்சூரியன்
உலகெங்கும் உலாவரத் தொடங்கிவிட்டது.
காகிதச்சுவர்களால் மறைக்கமுயன்றவர்கள்
தோல்வி அடைந்து துவண்டுவிட்டார்கள்.
இணையத்தேரேறித் தமிழன்பனாரின்
கவிதைமாண்பு உலகெங்கும்
உலாவரத் தொடங்கி நெடுநாளாகிவிட்டது.
 பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும்
பாராமுகம் காட்டிய நோபல்பரிசு
தமிழன்பனாரின் முகவரியை வினவிக் கொண்டிருக்கிறது.
விருதுகளை விரும்பாத தமிழன்பன்
புடினும் ஒபாமாவும் போர்வெறியைத் துறந்து
அனைத்துநாடுகளையும் சமமாக மதிக்கும்
அமைதிச்சூழல் அமைவதையே பரிசாகக்கேட்கலாம்.
எலும்பும் சாம்பலும் மண்டிக் கிடக்கும்
ஈழத்தில் பால்குடிக்கவும் வழியின்றிக்
கதறி அழும் குழந்தைகளின் கதறல்
காந்திதேசத்தின் காதுகளில் ஏன் விழவில்லை
என உரத்த குரலில் வினவிய தமிழன்பன்
‘ஓ!என் அருமை ஈழமே!’
என்னும் கவிதைத்தொகுப்பினால்
நடப்புகளை விளக்கி எதிர்பார்ப்புகளைத் தொகுத்துரைத்துள்ளார்.
எனவே சுருங்கச்சொன்னால்
தன்மானத்துடண் தலைநிமிர்ந்து வாழும் வாய்ப்பு
ஈழத் தமிழர்களுக்குக் கிட்டவேண்டும்
என்பதே அவர் எதிர்பார்க்கும் சிறந்த பரிசு எனக் கருதலாம்.
அந்தப்பரிசு விரைவில் கிட்ட இந்த நன்னாளில்
என் இனிய வாழ்த்துகள்.
அருமைத் துணைவியார் அன்பு மக்கள் உரிமைச் சுற்றம்
பேரப்பிள்ளைகள் சென்னிமலைவாழ் சொந்தங்கள்
அனைவரும் நலமும் வளமும் பெற்று
இணையிலாச் சிறப்புடன் நெடிது வாழிய.
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தினர் அவையோர்
அனைவரும் வாழ்க.











No comments :

Post a Comment