Pages

Monday, April 22, 2013

தமிழ் நாவலரா?ஆங்கிலக் காவலரா?--1



      தமிழ் நாவலரா?ஆங்கிலக் காவலரா?--1
எனது மாணவப் பருவத்தில் நாவலர் அவர்களின் நயமிக்க சொற்பொழிவுகள் என்னைப் பெரிதும் கவர்ந்தன என்பதில் ஐயமில்லை.என் பள்ளிப் பருவத்தின் நிறைவுப்பகுதியில் (ஐம்பதுகளின் பிற்பகுதியிலிருந்து) பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்புக் கிட்டியது.அண்ணவின் பொழிவுக்கு அடுத்தபடியாக நாவலரின் பேச்சுத்தான் மிகுதியும் ஈர்ப்புவாய்ந்து விளங்கியது.பேராசிரியர்,நாஞ்சில் மனோகரன் பேச்சுக்களும் பிடிக்குமெனினும் நாவலர்க்கு ஈடு நாவலர்தான்.கையைக்கையை ஆட்டி வளைத்து சில சமயங்களில் அந்தப் பெரிய உடலைக்கூட வளைத்து நெளித்து நாடகப்பாணியில் அவர் பொழிவு ஆற்றிய பாங்கு  இன்னும் மனக்கண்ணில் நிழலாடுகிறது.பாரதிதாசன் பாடல்களுக்கு இலக்கியநயமிக்க விளக்கம் வழங்குவது அவர்தம் தனிச்சிறப்பு.அப்போதெல்லாம் கலைஞர் பேச்சில் ஒரு காந்தக்கவர்ச்சி இருந்ததில்லை.தூண்டிவிட்டுப் போகும் வகையில்தான்(Provocative) அவர் பேச்சு இருக்கும்.இன்னும் அவர் அவையினை முன்னிலைப் படுத்தும் பாங்கு நினைவில் நிற்கிறது.
“பாண்டியன் பரம்பரையினரே!சேரனைச் சேர்ந்தவர்களே! சோழனுக்குச் சொந்தக்காரர்களே!என்றுதான் அவர் அவையை விளிப்பார்.மேலும் ஒரு சில இளைய பேச்சாளர்கள்-பெயர் நினைவில் இல்லைபாரதிதாசனின் புரட்சிக்கவியில் இடம்பெற்ற :பேரன்பு கொண்டோரே!என் பெற்ற தாய்மாரே! நல்லிளஞ் சிங்கங்காள்!என்று அவையை அழைப்பர்.
ஆனால் நாவலர் ஓர் அரைநூற்றாண்டாகஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்குஎனத் தொடங்கிப் பாடல் முழுமையும் முழங்கித்தான் தமது பேச்சைத் தொடங்குவார்.
பாரதிதாசனின் குறுங்காவியங்கள் நாடகப்பாங்கில் நாவலரால் சொல்லோவியப்படுத்தப்படும் முறை தனிச்சிறப்பு மிக்கது.ஆனால் நாவலர் பேச்சில் இருந்த வீரமும் வீறுணர்வும் அவர்தம் நடைமுறையில் கிடையாது என்பதனை அவர் ஆட்சிக்கட்டிலில் அமைச்சுப் பொறுப்பேற்ற பின்னர்தான் அறிந்துகொள்ளமுடிந்தது.
அறிஞர் அண்ணாவை விடப் புத்திசாலியாகத் தம்மைக் கருதிக்கொண்டு அவர் ஆற்றிய செயல்களை விளக்க இந்தப் பகுதியை நான் பயன்படுத்த விரும்பவில்லை.
ஒன்று மட்டும் உறுதியாக என்னால் அறுதியிட்டுரைக்க முடியும்.
அண்ணாவின் காலத்தில் தம்மை அண்ணாவை விட அறிவாளியாகக் கருதி அவர் செயல்பட்டதனால்தான் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் அவர் எப்போதுமே “எண்;2ஆகவே உலாவரும் அவலத்திற்கு ஆளானார்.
அண்ணாவின் அமைச்சரவையில் கல்வியமைச்சராகவும் நிதியமைச்சராகவும் பொறுப்பேற்ற் அவர் கல்விக் கொள்கையில் எந்தப் புதுமையையும் அறிமுகப்படுத்தவில்லை.
மக்கள் உள்ளத்தில் தமிழ்வீறு தழைத்த காரந்த்தால் தான் தி.மு.க.அரியணை ஏறியது என்பதை அவர் எஞ்ஞான்றும் எண்ணிப்பார்த்திலர்.
தமிழ் பயிற்சிமொழியாக,பாடமொழியாகச் செயல்பட முடியாது.அதற்கு இன்னும் காலம் செல்லவேண்டும்என்பதே அவர்தம் முடிந்த முடிபாக விளங்கியது.
“ஆங்கிலம் அறிவியலின் சாளரம்;உலகத்திற்கு வழிகாட்டி; எல்லோரும் ஆங்கிலம் படிக்கவேண்டும்..உயர்நிலைப் பள்ளிக்கு வந்தபின்னர்தான் ஆங்கிலம் என்னும் நிலைமாறித் தொடக்கப்பளியிலிருந்தே ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.என நாவலர் முழங்கினார்.காங்கிரசு ஆட்சிக்காலத்தில் எந்தக் காங்கிரசு அமைச்சருக்கும் இப்படிப் பேசும் துணிவு இருந்ததில்லை.சி.சுப்பிரமணியம் கல்வியமைச்சராக இருந்தபோது கல்லூரியில் தமிழைப் பயிற்றுமொழியாக்கும் திட்டத்திற்கு வெள்ளையறிக்கை வழங்கித் தாய்மொழிக்கல்விக்குக் கால்ஓள் நிறுவினார்.ஆனால் தமிழை முழங்கி-பாரதிதாசனை முழங்கி ஆட்சிப்பேறு பெற்ற நாவலர்தமிழ்  மருத்துவம்,பொறியியல் துறைகளில் வெற்றிபெற நீண்டநாள் ஆகும் என ஆரூடம் கூறினார்.
இத்துணைநாள் நாவலர் முழங்கிய தமிழ்முழக்கத்திற்கு என்ன பொருள்?அவர் ஒரு திராவிட உபன்யாசகராகவே விளங்கினார் என்பது அப்போதுதான் வெட்டவெளிச்சமாகியது.
ஆட்சி மாறியதால் அன்னைத்தமிழ் ஏற்றமுறும் என எண்ணியிருந்த தமிழன்பர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்தான்.அவர்கள் உள்ளத்தில் ஏற்பட்ட குமுறலுக்கு வடிகாலாக ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டது.(தொடரும்)


No comments :

Post a Comment