Pages

Thursday, April 25, 2013


          தமிழ் நாவலரா?ஆங்கிலக் காவலரா?-2
அந்தக் காலத்தில் தமிழாசிரியர்களுக்கு ஒரு தனிமதிப்பு இருந்ததுபள்ளியிலும் வெளியிலும்  நல்ல வாழ்வியல் வழிகாட்டிகளாகச் செயற்பட்டுச் சமூக மதிப்புகளை மக்கள் மனத்தில் ஊன்றச் செய்யும் ஆற்றல் அவர்களுக்கிருந்தது.இதற்குப் பெரிதும் பின்புலமாக அமைந்தது தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கமே எனில் மிகையன்று.பெரியாரிக்கச் சார்புடைய தமிழாசிரியர்கள் புதிதாகக் கல்விபயிலும் வாய்ப்புப் பெற்ற பின்தங்கியோரும் ஒடுக்கப்பட்ட  பிரிவினரும் சுயமரியாதை கொண்டு வலிவுடன் எழுச்சி கொள்ள வழிகாட்டிய திறத்தை விரிக்கப் புகுந்தால் தனி ஒரு நூலே தேவைப்படும்.
சுருக்கமாகச் சொன்னால் தலைமையாசிரியருக்குக் கட்டுப்படாத மாணவர்களும் தமிழாசிரியர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டனர்.இத்தகைய பெருமிதம் வாய்ந்த தமிழாசிரியர்களின் ஊதியம் ஆங்கிலம்,,அறிவியல் பயிற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தை விடக் குறைவாகவே இருந்துவந்தது.ஏனைய பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையாகத் தமது ஊதியத்தை உயர்த்துமாறு நீண்டநாள்களாக அரசை வலியுறுத்திவந்தனர்.
அறுபத்தேழில்(1967)ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின்னர்த் த்மது நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும் என்னும் நம்பிக்கையுடன் ஒரு மாநிலமாநாட்டை 1967-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கோவையில் நடத்தினர்.
மாநிலத்தமிழாசிரியர் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் 1965 இந்தி எதிர்ப்புப் போரில் சிறைவைக்கப்பட்டுப் பதவி பறிக்கப்ப்ட்டு ஆட்சிமாற்றத்தின் பின்னர் மாநிலக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்றிருந்த பேராசிரியர் சி.இலக்குவனாரும் அப்போதைய கல்வி+நிதியமைச்சர் நாவலர் இருவரும் சிறப்பு விருந்தினர்
.இலக்குவனார் தலைமையில் நாவலர் சொற்பொழிவு.
தொடக்கத்தில் தமிழாசிரியர்கள் ஆங்கில ஆசிரியருக்கு ஒரு ரூபாவேனும் கூடுதலாகத் தமது ஊதியத்தை வரையறுத்துக் குறைந்த ஊதியம் பெறும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமெனக் கல்வியமைச்சர் நாவலரிடம் வேண்டுகோள் முன்மொழிந்தனர்.
கல்வியையும் நிதியையும் வைத்திருக்கும் அன்மைச்சர் நாவலர் பேச எழுந்தார்.
தமிழாசிரியர்கள் கிணற்றுத் தவளைகளாக இருக்கும் நிலை மாறவேண்டும்.ஆங்கிலம்பயிலவேண்டும்.ஆங்கிலம் அறிவியலின் சாளரம்.ஆங்கிலத்தைத் தொடக்கப்பள்ளியிலிருந்து பயிற்றவேண்டும்என்றெல்லாம் முழங்கினார்.
அதன்பின்னர் பயிற்றுமொழிக்காகத் தமிழ் உரிமைப்பெருநடைப் பயணம் மேற்கோண்டு சிறைசென்று பதவியிழந்த பேராசிரியர் சி.இலக்குவனாரை மேடையில் வைத்துக்கொண்டே பிற்போக்கான ஒரு கருத்தைப் புதுமையாகப் பேசுவதாகக் கருதிப் பேசத் தொடங்கினார்.
தமிழ் பொறியியல்,மருத்துவம்,தொழில்நுட்பம் முதலிய துறைகளில் உடனே செயற்படும் நிலை இல்லை.இன்னும் அதற்கு நிறையக் காலம் பிடிகும்.என் மகன் காலத்தில் இல்லாவிட்டாலும் என் மகனுக்கு மகன் காலத்தில் அல்லது பேரனுக்குப் பேரன் காலத்தில் வெற்றி பெறலாம்,ஒரு நூறு ஆண்டுகளாவது தேவைப்படும்.எனவே விரைவுபடுத்தக்கூடாது.” என்று கூறிவிட்டார்.
தமிழாசிரியர்களின் குறைந்த ஊதியம் பெறும் அவலத்திற்கும் தீர்வு வழங்கவில்லை;ஏற்கெனவே அரசு ஏனைய பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கீழாகத் தங்களை நடத்திவருகிறது என்னும் மனக்குறையைப் போக்கும் மறுமொழியும் இல்லை.கிணற்றுத் தவளைகளாக இருந்துவிடாதீர் என்னும் அறிவுரையும் தமிழ் பாடமொழியாகப் பயிற்றுமொழியாகப் பீடுநடை பயில நூறு ஆண்டுகள் ஆகும் என்னும் பிற்போக்குக் கருத்தைத் தமிழாசிரியர்களின் மாநிலமாநாட்டிலேயே பேசும் அறியாமை நிறைந்த பேச்சு அமைச்சரின் பேச்சு.
இலக்குவனார் தமது தலைவர் முன்னுரையில் தமிழ் பயிற்சிமொழியாக அறிவிக்கப்பட வேண்டுமெனக் கூறியிருந்தார்.
1963-ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரசு முதல்முறையாகத் தமிழைப் பயிற்சிமொழியாக நடைமுறைப்படுத்தியது கோவை பூ.சா.கோ.கலைக்கல்லூரியில் தான்.அந்தக் கோவையில் இப்படி ஒரு பொழிவா?
இலக்குவனார் கூட்டத் தலைவர் எனும் முறையில் முடிவுரை கூற எழுந்தார்.உடனே நாவலர் தாம் வேறொரு நிகழ்ச்சிக்குச் செல்லவிருப்பதாகவும் தாம் கிளம்புவதாகவும் தெரிவித்துப் புறப்பட்டார்.”இல்லை.இல்லை.அமைச்சர் என் முன்னுரியைக் கேட்டுவிட்டுத் தான் செல்லவேண்டும்என இலக்குவனார் கூறியமை  ஒலிவாங்கி வழி அனைவருக்கும் கேட்டுவிட்டது.உடனே ஒலித்த கையொலிகளுக்குக் கட்டுப்பட்டு நாவலர் அமர்ந்தார்.
நான் இங்கே காந்தியடிகளின் சார்பாளனாக,இராசராம் மோகன்ராயின் சார்பாக,இரவீந்திரநாதரின் சார்பாளனாகப் பேசவந்துள்ளேன்.நான் சர்வாதிகாரியானால் உடனே தாய்மொழியைப் பயிற்றுமொழியாக நடைமுறைப்படுத்தச் சட்டமியற்றுவேன் என்றார் காந்தியடிகள்.நாம் தாய்மொழியில் கல்விகற்றால் ஏனைய அடித்தள மக்களும்  புதிய செய்திகளை அறிந்து முன்னேறும் சூழல் ஏற்பட்டு  அறிவுப்புரட்சி மலரும் என இராசாராம் மோகனராய் கூறினார்,தாய்மொழியில் பயிலாது வேற்றுமொழியில் பயில்வது கட்டிய மனைவியிடமே வழக்கறிஞர் வைத்துப் பேசுவதைப் போன்றது எனத் தாகூர் கூறினார் அவர்கள் சார்பாகக் கல்வியமைச்சரிடம் வேண்டுவது உடனே தமிழைப் பயிற்றுமொழியாக அறிவித்துச் செயற்பட முயலவேண்டும் என்னும் ஒரே வேண்டுகோளாகும்.
தமிழாசிரியர்களை ஆங்கிலம் பயிலச் சொல்வதும் தொடக்கப்பள்ளி முதலே ஆங்கிலத்தைத் திணிப்பதும் தேவையா?
ஐந்து ஆண்டுகளில் தமிழ்வளர்ச்சிக்கு ஆவன செய்வீர்கள் எனக் கருதியே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளனர்.தமிழ் பயிற்றுமொழியாவதற்கு நூறு ஆண்டுகள் ஆகும் என்று கூறலாமா?
தமிழ் நாவலராக இருக்கவேண்டிய நீங்கள் ஆங்கிலக் காவலர் ஆக முயல்வதா?”
இவையே இலக்குவனார் பொழிவின் சாரம்.
அவர் பேசிய ஒவ்வொரு சொல்லும் அன்றைக்குத் தமிழாசிரியர்கள் நெஞ்சில் குடிகொண்டிருந்த தமிழ்வீறுணர்வை எதிரொலிப்பதாக அமைந்திருந்தமையால் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் கையொலி பல நிமிடங்கள் எழுப்பப்பட்டது.
இந் நாள்வரை தி.மு/.மேடைகளில் முழங்கிய தமிழ் எழுச்சிமுழக்கம் தான் இலக்குவனார் பேச்சிலும் அமைந்திருந்தது.ஆனால் தமக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் இலக்குவனார் பேசிவிட்டதைப் போன்ற கசப்பு உணர்வோடும் சுண்டிய முகத்துடன் நாவலர் வெளியேறினார்.
அடுத்தநாள் தினமணியில்
கல்வியமைச்சர் பேச்சுக்குத் தமிழ்ப்புலவர் ஆட்சேபம்
என்னும் தலைப்பிட்டு இச் செய்தி வெளியாகியது.
தில்லி வானொலிச் செய்தி ஒலிபரப்பில் இச் செய்தி கூறப்பட்டது.
மங்காத தமிழின் மாண்பைச் சங்கினால் முழங்கிக் கொண்டிருந்த நாவலர்  சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தார்.
இலக்குவனார் வலியுறுத்திய கூற்றுக்கள் ஆட்சிக்கும் நாட்டுக்கும் நலம் பயப்பவையே என்னும் கருத்தின்றி அவர் ஏதோஅரசத்துரோகம்இழைத்ததாகக் கருதலானார்.
காங்கிரசு ஆட்சிக் காலத்தில் கைது செய்யபட்டுப் பணி பறிக்கப்பட்ட இலக்குவனார்க்குப் பணிவழங்குவதாக மாணவர்களிடமும் மக்களிடமும் வாக்குறுதியைத் தி.மு..வழங்கியுள்ளது என்பதையும் மறந்து அந்த ஓராண்டிலேயே இலக்குவனார்க்குச் சீட்டுக் கிழிக்கப்பட்டது.
இலக்குவனாரின் தொல்காப்பிய மொழிபெயர்ப்பு சிறந்த மொழிபெயர்ப்பாகக் கருதப்பட்டு ஐந்தாயிரம் பரிசு அறிவிக்கப்பட்டு வந்த கோப்பு திருப்பி அனுப்பப்பட்டது.அத்துடன் விட்டிருந்தால் கூட இச் செயல்களுக்கு நோக்கம் எதுவும் இல்லையெனக் கூறிடலாம்.ஆனால் அடுத்த ஆண்டு(1969) விரிவுரையாளர் பணிக்கு நேர்காணல் சென்ற இலக்குவனார் மகன் மறைமலைக்கும் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது.
நாவலரின் நெஞ்சில் வீண்பகையுணர்வு குடிகொண்டு  அவரின் நேர்மையைக் கேள்விக்குறியாக்கிவிட்டது.











































































































Monday, April 22, 2013

தமிழ் நாவலரா?ஆங்கிலக் காவலரா?--1



      தமிழ் நாவலரா?ஆங்கிலக் காவலரா?--1
எனது மாணவப் பருவத்தில் நாவலர் அவர்களின் நயமிக்க சொற்பொழிவுகள் என்னைப் பெரிதும் கவர்ந்தன என்பதில் ஐயமில்லை.என் பள்ளிப் பருவத்தின் நிறைவுப்பகுதியில் (ஐம்பதுகளின் பிற்பகுதியிலிருந்து) பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்புக் கிட்டியது.அண்ணவின் பொழிவுக்கு அடுத்தபடியாக நாவலரின் பேச்சுத்தான் மிகுதியும் ஈர்ப்புவாய்ந்து விளங்கியது.பேராசிரியர்,நாஞ்சில் மனோகரன் பேச்சுக்களும் பிடிக்குமெனினும் நாவலர்க்கு ஈடு நாவலர்தான்.கையைக்கையை ஆட்டி வளைத்து சில சமயங்களில் அந்தப் பெரிய உடலைக்கூட வளைத்து நெளித்து நாடகப்பாணியில் அவர் பொழிவு ஆற்றிய பாங்கு  இன்னும் மனக்கண்ணில் நிழலாடுகிறது.பாரதிதாசன் பாடல்களுக்கு இலக்கியநயமிக்க விளக்கம் வழங்குவது அவர்தம் தனிச்சிறப்பு.அப்போதெல்லாம் கலைஞர் பேச்சில் ஒரு காந்தக்கவர்ச்சி இருந்ததில்லை.தூண்டிவிட்டுப் போகும் வகையில்தான்(Provocative) அவர் பேச்சு இருக்கும்.இன்னும் அவர் அவையினை முன்னிலைப் படுத்தும் பாங்கு நினைவில் நிற்கிறது.
“பாண்டியன் பரம்பரையினரே!சேரனைச் சேர்ந்தவர்களே! சோழனுக்குச் சொந்தக்காரர்களே!என்றுதான் அவர் அவையை விளிப்பார்.மேலும் ஒரு சில இளைய பேச்சாளர்கள்-பெயர் நினைவில் இல்லைபாரதிதாசனின் புரட்சிக்கவியில் இடம்பெற்ற :பேரன்பு கொண்டோரே!என் பெற்ற தாய்மாரே! நல்லிளஞ் சிங்கங்காள்!என்று அவையை அழைப்பர்.
ஆனால் நாவலர் ஓர் அரைநூற்றாண்டாகஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்குஎனத் தொடங்கிப் பாடல் முழுமையும் முழங்கித்தான் தமது பேச்சைத் தொடங்குவார்.
பாரதிதாசனின் குறுங்காவியங்கள் நாடகப்பாங்கில் நாவலரால் சொல்லோவியப்படுத்தப்படும் முறை தனிச்சிறப்பு மிக்கது.ஆனால் நாவலர் பேச்சில் இருந்த வீரமும் வீறுணர்வும் அவர்தம் நடைமுறையில் கிடையாது என்பதனை அவர் ஆட்சிக்கட்டிலில் அமைச்சுப் பொறுப்பேற்ற பின்னர்தான் அறிந்துகொள்ளமுடிந்தது.
அறிஞர் அண்ணாவை விடப் புத்திசாலியாகத் தம்மைக் கருதிக்கொண்டு அவர் ஆற்றிய செயல்களை விளக்க இந்தப் பகுதியை நான் பயன்படுத்த விரும்பவில்லை.
ஒன்று மட்டும் உறுதியாக என்னால் அறுதியிட்டுரைக்க முடியும்.
அண்ணாவின் காலத்தில் தம்மை அண்ணாவை விட அறிவாளியாகக் கருதி அவர் செயல்பட்டதனால்தான் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் அவர் எப்போதுமே “எண்;2ஆகவே உலாவரும் அவலத்திற்கு ஆளானார்.
அண்ணாவின் அமைச்சரவையில் கல்வியமைச்சராகவும் நிதியமைச்சராகவும் பொறுப்பேற்ற் அவர் கல்விக் கொள்கையில் எந்தப் புதுமையையும் அறிமுகப்படுத்தவில்லை.
மக்கள் உள்ளத்தில் தமிழ்வீறு தழைத்த காரந்த்தால் தான் தி.மு.க.அரியணை ஏறியது என்பதை அவர் எஞ்ஞான்றும் எண்ணிப்பார்த்திலர்.
தமிழ் பயிற்சிமொழியாக,பாடமொழியாகச் செயல்பட முடியாது.அதற்கு இன்னும் காலம் செல்லவேண்டும்என்பதே அவர்தம் முடிந்த முடிபாக விளங்கியது.
“ஆங்கிலம் அறிவியலின் சாளரம்;உலகத்திற்கு வழிகாட்டி; எல்லோரும் ஆங்கிலம் படிக்கவேண்டும்..உயர்நிலைப் பள்ளிக்கு வந்தபின்னர்தான் ஆங்கிலம் என்னும் நிலைமாறித் தொடக்கப்பளியிலிருந்தே ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.என நாவலர் முழங்கினார்.காங்கிரசு ஆட்சிக்காலத்தில் எந்தக் காங்கிரசு அமைச்சருக்கும் இப்படிப் பேசும் துணிவு இருந்ததில்லை.சி.சுப்பிரமணியம் கல்வியமைச்சராக இருந்தபோது கல்லூரியில் தமிழைப் பயிற்றுமொழியாக்கும் திட்டத்திற்கு வெள்ளையறிக்கை வழங்கித் தாய்மொழிக்கல்விக்குக் கால்ஓள் நிறுவினார்.ஆனால் தமிழை முழங்கி-பாரதிதாசனை முழங்கி ஆட்சிப்பேறு பெற்ற நாவலர்தமிழ்  மருத்துவம்,பொறியியல் துறைகளில் வெற்றிபெற நீண்டநாள் ஆகும் என ஆரூடம் கூறினார்.
இத்துணைநாள் நாவலர் முழங்கிய தமிழ்முழக்கத்திற்கு என்ன பொருள்?அவர் ஒரு திராவிட உபன்யாசகராகவே விளங்கினார் என்பது அப்போதுதான் வெட்டவெளிச்சமாகியது.
ஆட்சி மாறியதால் அன்னைத்தமிழ் ஏற்றமுறும் என எண்ணியிருந்த தமிழன்பர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்தான்.அவர்கள் உள்ளத்தில் ஏற்பட்ட குமுறலுக்கு வடிகாலாக ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டது.(தொடரும்)


Sunday, April 21, 2013

இன்று பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள்:



இன்று பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள்:
1956-57 கல்வி ஆண்டில் நான் ஆறாம் வகுப்புப் பயின்றேன்.அக் கல்வி ஆண்டில்(மாதம் நினைவில் இல்லை.) பாரதிதாசன் நாகர்கோவில் வந்தார்.என் தந்தையார் அப்போது
நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர்.இராமவர்மபுரம் சவகர் தெருவில் எங்கள் இல்லம்.பாரதிதாசன் எங்கள் இல்லத்தில் இரு நாள்கள் தங்கிய நினைவு இன்னும் பசுமையாகப் பதிந்துள்ளது.காலையில் மாடிக்குப் போய் அவருக்குக் காப்பி கொடுத்துவிட்டுச் சிற்றுண்டி எத்தனை மணிக்குச் சாப்பிடுகிறார் என்பதைக் கேட்டுவிட்டு நண்பகல் என்ன சமையல் எனவும் கேட்டுவரச் சொன்னார்கள்.
ஆங்..சாப்பாடா.?குஞ்சுமீன் குழம்பும் கோழிவறுவலும் செய்யச் சொல்லுப்பா...
அவர் சொன்ன செய்தியைக் கீழே வந்து அம்மாவிடம் பகிர்ந்தபின்னர் அவருடைய இயல்பான உரையாடலில் கூட மோனைநலம் மிளிர்வதாகப் பத்தாம் வகுப்புப் பயின்று கொண்டிருந்த என் அண்ணன் திருவேலன் அவ்ர்கள் சொன்னதும் நினைவில் நிற்கிறது.மோனையைப் பற்றிய தெளிவும் பாவேந்தரைப் பற்றிய படிமமும் அப்போது பசுமரத்தாணியெனப் பதிந்தது..

நான் இரண்டாம் முறை பாவேந்தரைப் பார்க்கும் வாய்ப்புப் பெற்றது 1962-ஆம் ஆண்டில்தான்.அப்போது நான் தியாகராசர் கல்லூரியில் புகுமுக வகுப்பு மாணாக்கன்.தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த என் தந்தையார் கல்லூரித் தமிழ்மன்றத்திற்கு(இளங்கோ மன்றம்) சிறப்புப் பொழிவு ஆற்றுதற்கு அழைத்திருந்தார்.அவர் பேசியது முழுமையும் நினைவில் இல்லை.ஆனால் தமிழ் மரபுக்கு மாறாக உரை வகுத்த உரையாசிரியர்களை-குறிப்பாக -பரிமேலழகரை-அவர் கடுஞ்சொல் கூறிச் சாடியது நினைவில் உள்ளது.நல்லவேளை அப்போது பரிமேலழகர் உயிருடன் இல்லை.மறைந்து எழுநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.இல்லாவிட்டால் அறைந்தே கொன்றிருப்பார் போல.என்று ஒரு முதுகலை வகுப்புப் பயின்ற அண்ணன்’(பெயர் தெரியாது) கூறியது  மட்டும் நினைவில் பதிந்துள்ளது.
அவர் பாவேந்தரைப் பாராட்டினாரா இல்லை பகடி செய்தாரா என்பதும் அப்போது புரியவில்லை.

1962-இல் பாவேந்தர் மதுரை வந்தபொது நியூ காலேசு அவுசு என அழைக்கப்பட்ட விடுதியில்_இன்னும் இந்தப் பெயரிலே அங்கே இயங்கிவரும் புகழ்பெற்ற தனியார் விடுதியில் தங்கினார்.என் ஆசான் இளங்குமரன் அவர்களுடன் சென்று பார்த்ததாக நினைவு.சரியான முரடரோ என்னும் மருட்சி மேலோங்கியது.நேரில் அனைவருடனும் கனிவாகப் பழகினாலும் பெரியவர்களையெல்லாம் அவன் இவன் என்று அவர் ஒருமையில் குறிப்பிட்டது நெருடலையே ஏற்படுத்தியது.
நெட்டுருச் செய்து மேடையில் முழங்கத்தான் பாவேந்தர் பாடல்கள் பயன்படும் என்றுதான் மாணவப்பருவத்தில் நினைத்திருந்தோம்.கல்லூரி மாணவர் தேர்தலில் போட்டியிட முதல் தகுதி பாரதிதாசன் பாடல்களை உணர்வுமேலோங்கக் கூறவேண்டும் என்பதுதான்.நாவலர் நெடுஞ்செழியன் தமது பொழிவில் பாவேந்தர் பாடலின் நயமும் நுட்பமும் கூறி எங்களை ஆற்றுப்படுத்தியபின்னரே அவர் அருமை புலப்படலாயிற்று.அறுபதுகளில் கல்லூரிப் பேராசிரியர்களுள் என் தந்தையார் மட்டுமே முதுகலை மாணாக்கர்க்குப் பாவேந்தர் பாடலின் மேன்மையை உணர்த்திவந்தார் என்பதை மூத்த முதுகலை அண்ணன்கள் வாயிலாக அறிந்தேன்.பாவேந்தர் உயிருடன் இருந்தபோதே அவரது பாடல்களைப் பாடநூலாக அறிமுகப்படுத்தியவர் என் தந்தையார்.1956-இல் நாகர்கோவில் கேரள மாநிலத்துடன் இணைந்திருந்தது.அங்கே தமிழ் முதுகலை வகுப்பிற்குப் பாரதிதாசனின் குடும்பவிளக்கு என் தந்தையார் முயற்சியால் பாடநுலாக்கப் பட்டிருந்தது.
பாரதிதாசன் அவர்களின் மறைவின்போது நான் எழுதிய கையறுநிலைக்கட்டுரை என் தந்தையாரின் குறள்நெறியில் வெளிவந்தது.அந்த இதழ் இப்போது எங்களிடம் இல்லை.துறைதோறும் தொண்டு செய்வாய் தமிழுக்குத் துடித்தெழுந்தேஎன்னும் பாவேந்தரின் ஆணையை ஏற்று அறிவியல் தமிழ்க்கட்டுரைகளை என் மாணவப்பருவத்தில் எழுதிவந்தேன்.1964-இல் குறள் நெறியில் வெளிவந்த மீனியல்(ICTHYOLOGY) என்னும் தொடர்கட்டுரை கல்லூரி ஆண்டுமலரில் வெளிவந்த தொய்வகம்(Rubber) எனும் கட்டுரை செந்தமிழ்ச்செல்வியில் வெளிவந்த அறிவியல் அறிஞர் இராமலிங்க அடிகளார்எனும் கட்டுரை தென்மொழியில் வெளிவந்தஉளவியல் அறிஞர் தொல்காப்பியர்எனும் கட்டுரை போன்றவை என் மாணவப் பருவ முயற்சிகள் என்பதுடன் எனக்கு நிறையப் பாராட்டுகளைக் குவித்தன என்பதையும் மகிழ்வோடு நினைவுகூர்கிறேன்.இத்தகைய முயற்சிகளுக்கு வித்திட்ட பாவேந்தரின்துறைதோறும் தொண்டு செய்வாய் தமிழுக்குத் துடித்தெழுந்தே:என்னும் ஆணை இன்னும் நிறையப் பேரால் பின்பற்றப்படவேண்டும்.

தமிழ் முதுகலை வகுப்பில் எங்கள் ஆசான் ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை அவர்கள் (ஔவை என்றே நாங்கள் அழைப்போம்) தொல்காப்பியம் உவமவியல் மெய்ப்பாட்டியல் ஆகியவற்றிற்கு விளக்கம் வழங்குகையில் சங்க இலக்கியங்களையும் பாரதிதாசன் பாடல்களையும் மேற்கோள் காட்டுவார்.பாரதிதாசனைப் பயிலவேண்டிய புலமைசால் அணுகுமுறையை அவரே எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.அதுவரை நாங்கள் உச்சிமேற் போற்றிவந்த நாவலரின் விளக்கங்கள் வெறும் நயவுரைகளே என்னும் தெளிவு அப்போதுதான் ஏற்பட்டது.ஆனால் அந்த நாவலரின் அறிமுகம் இல்லாமற்போயிருந்தால் பாரதிதாசன் பாடல்களை நாங்கள் ஒவ்வொருவரும் விலைக்கு வாங்கிவைத்துக் கொள்ளும் பழக்கமும் ஓசிகேட்பது நாணத்தக்கது என்னும் நாணவுணர்வும் எங்கள் உள்ளத்தில் ஊன்றியிரா.
என்னுடைய தந்தையார் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களை எனக்கு முழுமையும் புரியவைத்தவை பாரதிதாசன் பாடலகளேயாகும். பாவேந்தர் வலியுறுத்திய தமிழ்மறம்இலக்குவனார் எனும் பெயரில் ஒரு வடிவெடுத்து உலாவியது;உணர்வூட்டியது என்றே கூறவேண்டும்.அவர் பாடிய தமிழியக்கமே இலக்குவனாரின் வாழ்வியக்கம்.கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்கஎன உரைத்தவர் பாவேந்தர்;அவ்வண்ணம் வாழ்ந்தவர் இலக்குவனார்.
உரம் பெய்த செந்தமிழ்க்குத் தீங்கொன்று நேர்ந்ததென்று உய்ரைக்கக் கேட்டால் நரம்பெல்லாம் இரும்பாக்கி நனவெல்லாம் உணர்வாக்கிக் கிளர்ந்தெழுந்தவர் இலக்குவனார்; ஒற்றைத் தனிமாந்தப் படையெனப் போர்க்களம் பல கண்டவர் இலக்குவனார்; அதன் விளைவாகத் தான் குமாரசாமி ராசா காலம் முதல் பக்தவத்சலம் காலம் வரை அனைத்து முதலமைச்சர்களும் அவரைக் கண்டு அஞ்சினர்;அல்லல் விளைத்தனர்.