Pages

Sunday, October 13, 2013




இலக்கியவீதி இனியவன்----வள்ளன்மைக்கு ஓர் இலக்கணம்
 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்(குறள்-228.) என்பது வள்ளுவர் வாய்மொழி.தயையும் கொடையும் பிறவிக்குணம்என்பது ஔவையார் வழங்கிய அருள்மொழி.

கொடுத்து மகிழ்வதும் பிறரைப் பாராட்டிச் சீராட்டி இன்புறுவதும் வள்ளல்களுக்கு வாய்த்த பண்புகள்.அத்தகைய பண்புக்கு ஓர் உறைவிடமாகத் திகழ்பவர் இனியவன் அவர்கள்.

வேடந்தாங்கல், பறவைகளின் புகலிடமாகத் திகழ்ந்து புகழ்பெற்றதனைப் போன்றே கவிதைப் பறவைகளின்தாய்வீடாகப்
பாரெங்கும் பெயர்பெற்றமைக்குக் காரணம் இனியவன் அவர்கள் தோற்றுவித்த இலக்கியவீதி என்னும் அமைப்பே என்னும் உண்மை உலகறிந்த செய்தி எனலாம்.

தமிழ்நாட்டில் சிறப்புமிக்க இ8லக்கியவிழாக்கள் நகரங்களில் நடப்பதுதான் வாடிக்கை.சென்னையிலும் மதுரையிலும் கோவையிலும் சேலத்திலும் நடைபெற்ற அளவு சிறப்புடன் வேறு ஊர்களில் இலக்கியவிழாக்கள் நடைபெற்றதில்லை.
காலப்போக்கில் ஈரோட்டிலும் காரைக்குடியிலும் நடைபெற்றதனையும் எட்டயபுரத்திலும் புதுச்சேரியிலும் பாரதியார்,பாரதிதாசன் விழாக்கள் கொண்டாடப்பட்டதையும் மட்டுமே விதிவிலக்காகக் கூறலாம்.ஆனால் சென்னைக்கு வெகுதொலைவில் வேடந்தாங்கலில் இனியவன் அவர்கள் நடத்திய இலக்கியவிழாக்கள் பலவகையில் அருஞ்செயல் ஆற்றிய விழாக்கள் எனலாம்.

பாரதியார்,பாரதிதாசன் வழியில் பல மறுமலர்ச்சிக் கவிஞர்களைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இலக்கியவீதியின் மாண்புகளுள் ஒன்று. தாராபாரதி,மலர்மகன்,பல்லவன்,தளவை இளங்குமரன்,கவிமுகில்,சொல்கேளான் என இவ்வரிசை நீளும்.

ஒரு கவிஞரின் கவிதைநூலுக்குச் சிறப்பான விழா எடுத்து அறிமுகம் செய்வதிலும் அவ் விழாவிலேயே அச்சிட்ட அத்தனைப் படிகளும் விற்பனையாகிவிடுவதிலும் சாதனை படைத்தது இனியவனின் இலக்கியவீதியே.

தமிழ்நாட்டிலுள்ள் அத்துணை இலக்கியச் சான்றோர்களையும் வேடந்தாங்கலுக்கே வரவழைத்து அந்த ஊரை ஓர் இலக்கியக்கூடல்நகராக,தமிழின் கூடுதுறையாக மாற்றிய பெருமையும் இலக்கியவீதிக்கு உரியது.

கண்ணன் இதழில் குழந்தைகளுக்காகச் சிறுகதை எழுதிப் பின்னர்
ஆனந்தவிகடன்,கல்கி,கலைமகள் என்னும் இதழ்களில் புனைகதைகளைப் புதுமை மிளிரப் படைத்துவந்த இனியவன் தமது படைப்புப் பணியை நிறுத்திவைத்துவிட்டுப் பாவலர்களைப் பாராட்டி விழாக்கள் எடுப்பதனையே தம் முழுநேரப் பணியாகக் கொண்ட வள்ளன்மை காப்பியம் பாடிப் புகழவேண்டிய சிறப்புக்கு உரியது

தமது வளர்ச்சியையும் வளத்தையும் ஒருபொருட்டாகக் கருதாது
“வித்தும் இடல்வேண்டும் கொல்லோ?விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்என்னும் வள்ளுவர் வாய்மொழியைப் பொன்னேபோல் போற்றித் த்மது வளமான நிலத்தையும் அவர் கவனிக்கத் தவறினார் எனலாம்.நல்லவேளையாக்த் திருமதி.இனியவன் அவர்கள் தலையிட்டுத் தமது மேலாண்மைத் திறத்தால் தொழிலாளரைச் சிறப்புறப் பணியாற்றவைத்து நிலத்தைத் தரிசாகப் பாழாகாமல் விளைச்சலுக்கு வழிவகுத்தார்.
தமது துணைவியாரின் தாளாண்மையின் விளைவாகச் ‘செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் இனியவன் அவர்களின் வேளாண்மை சிறப்புற்றது என்பதே உண்மை.எனினும் இந்நிலையும் நெடுநாள் நீடிக்கவில்லை.

சென்னைக் கம்பன் கழகச் செயலாளராகத் தொண்டாற்றுமாறு அருளாளர் இராம.வீரப்பன் பணித்ததற்கினங்கச் சென்னைக்கே வந்துவிட்ட இனியவன் அவர்கள் தம் ஊரையும் மறந்தார்,நிலத்தையும் மறந்தார் என்றே கூறவேண்டும்.

விளம்பரம் பெற்றவர்களின் பின்னேயே செல்லும் தமிழ்ப்பண்புக்கு மாறாக,இலைமறைகனியாக,போற்றுவாரின்றிப் பணியாற்றிவரும் இலக்கியச்சான்றோர்களை இனங்கண்டு பாராட்டச்செய்யும் மாண்பு இனியவன் அவர்களுக்கே உரிய தனிச்சிறப்பாகும்.


பெரும்பதவிகள்,அரசியல் விளம்பரம்,திரைப்படச் செல்வாக்கு என்னும் வாய்ப்புகளைப் பெற்று வலம்வருவோரை விடுத்து,புலமையும் தமிழ்த்தொண்டு புரியும் தகைமையும் பெற்றோரைப் போற்றிப் பாராட்டச் செய்யும் இவரது பணியை அரசுநிறுவனங்களும் பின்பற்றத் தொடங்கினால் உண்மையான தமிழ்மறுமலர்ச்சி உறுதியாக உருவாகும் என்பதில் ஐயமில்லை.