Pages

Monday, June 02, 2014

கலைஞர்-91

                            கலைஞர்-91
தொண்ணூறாண்டு நிறைந்த ஒரு பெரியவரை வாழ்த்துவது கட்சிப்பற்றால் அல்ல; பெரியவர்களை வாழ்த்துவது நம் பண்பாடு. மிகவும் பிற்பட்ட வகுப்பில் பிறந்து பெரியார் தலைமையேற்றுக் கல்லடியும் சொல்லடியும் பட்டுக் களம்புகுந்து சிறைப்பட்டுப் பேரணியும் போராட்டமுமான அரசியல் வாழ்வேற்றுத் தம் சொல்வன்மையாலும் எழுத்தாற்றலாலும் புகழும் பெருமையும் பெற்ற ஒரு தமிழரை வாழ்த்துவது பொருத்தமான செயலே.
ஆனால் கட்சிப்பகைமையால் காழ்ப்புணர்வால் பிறந்தநாளில்கூட ஒருவரைப் பழித்துரைப்பது தமிழ்ப்பண்பாட்டுக்கு மட்டுமன்று மனிதப் பண்பாட்டுக்கே பொருந்தாத செயல்.
திரைக்கதை உரையாடல்,புதினம்,நாடகம்,மேடைப்பேச்சு ஆகிய துறைகளில் முத்திரை பதித்துப் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஈர்த்த கலைஞர் அவர்களை நாவார வாழ்த்துகிறோம்.உளமாரப் போற்றுகிறோம்.
2009 மே 17-ஆம் நாள்வரை கலைஞரை ‘உலகத் தமிழினத் தலைவர்’ என்று பெரும்பான்மையான தமிழர்கள் உலகெங்கும் கருதிவந்தார்கள்.அதன்பின் ஈழத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலையின் போது, தம்மிடம் அழுத்தமான எதிர்ப்பைக் காட்டக்கூடிய வலிமை இருந்தபோதும் வாளாவிருந்து வேடிக்கை பார்த்துவிட்டாரே என உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் வருந்தினார்கள்;வெதும்பினார்கள்;கொதித்தார்கள்.
ஒருமுறையன்று;பற்பல முறை பலப்பல அயல்நாடுகளில் வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ’கலைஞர் தமிழினத்தின் முதுகில் குத்திவிட்டார்’என வருந்தியதனை நான் நேரில் அறிந்தேன்.
மத்தியிலும் மாநிலத்திலும் தி.மு.க.ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதும் பதவிச்சுகம் பெரிதெனக் கருதித் தமிழினப் படுகொலையின் போது வாளவிருந்துவிட்டதே எனக் குமுறிய புலம்பெயர் தமிழர்கள் 2009 மே பதினேழாம் நாளின் பின்னர் தி.மு.க.வைத் தமிழர் தம் குலப்பகையாக்க் கருதத் தொடங்கிவிட்டனர்.அதன் தாக்கம் தமிழ்நாட்டிலும் பரவியதன் விளைவே அண்மையில் நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.அடைந்த படுதோல்வி.
’வெற்றியும் தோல்வியும் இயல்பே.’என அப்போது அமைதி கூறிய தலைவர் தி.மு.க. தனது கொள்கைகளைப் பின்பற்றுவதில் பெருந்தோல்வியைத் தழுவி நெடுநாளாகிவிட்டது என்பதனை ஏன் மறந்தார்?
1967-இல் காங்கிரசுக் கட்சியை வீழ்த்திப் புதிய வரலாறு படைத்த தி.மு.க. தமிழை ஆட்சிமொழியாக,பாடமொழியாக,வழக்குமன்ற மொழியாக அரியணையேற்றும் எனத் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள்.2014இலிலும் நாம் காண்பதென்ன?
எல்லாவற்றிற்கும் அ.இ.தி.மு.க.வைக் குறைகூறும் தி.மு.க.தனது ஆட்சிக்காலத்தில் தமிழுக்குச் சாதித்ததென்ன?
1967-இல் தி.மு.க.ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இருந்த தமிழுணர்வும் மொழிப்பற்றும் மேலும் தழைக்கும் வகையில் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் மொழிவளர்ச்சித் திட்டங்கள் நிறைவேறினவா?
போற்றிப் புகழ்பாடும் புலவர்கூட்டம் தம்மைச் சூழ்ந்திருக்காத நேரத்தில் கலைஞர் எண்ணிப் பார்க்கவேண்டும்.
‘கோமாளி’என்றும்’மலையாளி’என்றும் அவரால் எள்ளி நகையாடப்பட்ட ம.கோ.இராமச்சந்திரன் ஆட்சியில் நிறைவேறிய மொழிவளர்ச்சித் திட்டங்கள் கலைஞரது உள்ளத்தில் அரும்பாமைக்குக் காரணம் என்ன?
தமிழ்ப்பல்கலைக்கழகம்,தமிழ் வளர்ச்சி-பண்பாடு எனத் தனியாக ஒரு திணைக்களம்,அதற்கெனத் தனியே அமைச்சகம், செயலர், பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ்ச்சான்றோர்கள் பெயரிலான விருதுகள் என்று பலப்பல திட்டங்கள் தமிழினத் தலைவர் உள்ளத்தில் ஏன் தோன்றவில்லை?
பாலம் கட்டுவதும் சாலை அமைப்பதும் மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றுவதும் ஓர் ஆட்சியின் சாதனைகள் என்றால் காமராசர் செய்த சாதனைகளைவிடப் பெரிதாக யாரும் இனிச் செய்யப் போவதில்லை.அங்ஙனம் சாதித்த காமராசரையே அவர் ஊழல்மாசு படியாத சான்றோராக இருந்தபோதிலும் தமிழ்நலன் நாடாது விட்டார் என்றுதானே மக்கள் புறக்கணித்தனர்?
தமிழ் மொழி,இனம் ஆகியவற்றின் நலன் குறித்து முழுமையாகச் சிந்தித்துத் தமிழ்மறுமலர்ச்சியையே தன் குறிக்கோளாகக் கொண்டிருந்த தி.மு.க. மறைந்துவிட்டது.இனியும் மக்கள் ஏமாற ஆயத்தமாக இல்லை.
புகழ்ச்சொற்களைப் புனைந்துரைக்கும்  அன்பர்கள் இல்லாத வேளையில் கலைஞர் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
’தமிழ்’’தமிழினம்’என்று போலியாகப் பேசி மக்களை ஏமாற்றியதால் இன்று தமிழ்மொழியின் மீதே பாராமுகமாகப் போய்விட்டார்கள் தமிழர்கள்.
முதுமை மிக்க தலைவர் பிணிகளின்றி நோய்நொடியின்றி வாழ நமது வாழ்த்துகள்.
முதுமை நாம் பெறும் ஒன்றன்று;கால ஓட்டத்தால் அனைவருக்குமே விளைவது.
முதிர்ச்சி நாம் அடையவேண்டிய ஒன்று.இயல்பாக வந்துவிடாது.
நாம் செய்த பிழைகளுக்கு அடுத்தவர்களைக் குறைகூறாமல் பகுத்தறிவின் துணையுடன் சிந்தித்துச் சீர்தூக்கி நாம் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் திருத்திக் கொள்வது முதிர்ச்சியின் முதற்படி.
மூப்படைந்தபின் இளையவர்களுக்கு வாய்ப்பளித்து ஒதுங்கிநின்று  ஊக்கமளித்தல் முதிர்ச்சியின் இரண்டாம் படி.
புகழ்ப்போதையில் மயங்கிக் கிடக்காமல் இயக்கத்தை நிலைநிறுத்தும் உண்மையான தொண்டர்களைப் போற்றிப் பாராட்டுவதும் குடும்ப உறவுகளை ஒதுக்கித் தள்ளி உண்மையான தியாகிகளை உலகறியச் செய்வதும் முதிர்ச்சியின் முற்றிய நிலை.
முதிர்ச்சிமிக்க தலைவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா?
பெரியவர்களுக்கு ஒரு சொல்.
முதுமை காலக்கழிவினால் கழுதைக்கும் ஏற்படுகின்ற  ஒன்று.
முதிர்ச்சி அறிவின் செறிவாலும் உள்ளத்தின் கனிவாலும் அறிவுடையோர்க்கு ஏற்படும் படிநிலைவளர்ச்சி.
முதுமையையே பெருமைக்குரிய ஒன்றாகக் கருதிப் பூரித்துப் போய்விடவேண்டாம்.
உங்களிடம் முதிர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.
முதிர்ச்சியைப் பெறும் முயற்சி மேற்கொள்வீர்களா?