Pages

Saturday, September 24, 2016

ஒருநொடி சிந்திப்பீர்

ஒருநொடி சிந்திப்பீர்!
                             எழுச்சியூட்டும்
 எட்டு நாள் விழாவை இழந்தோம்!
கடன்கழிக்கும் சடங்கு தேவையா?
அருட்செல்வர் ந.மகாலிங்கம் அவர்கள் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக் காலமாக காந்தி-வள்ளலார் விழாவைச் சிறப்புற நடத்திவந்தார்.நாற்பத்தெட்டு ஆண்டுக்காலம்  நடந்த அத்துணை விழாக்களிலும் கலந்துகொண்டு சிறப்பித்த அந்தப் பெருந்தகை நாற்பத்தொன்பதாம் ஆண்டு நடந்தவிழாவில் தாம் உரையாற்றிக்கொன்டிருந்த வேளையில் மயங்கினார்.அதன்பின் நம் அனைவரின் உள்ளம் நைந்து வருந்தும் வகையில் நம்மை விட்டுப் பிரிந்தார்.அதன்விளைவாக, அவர் மறைவுக்குப் பின்னர் சென்ற ஆண்டு நடந்த பொன்விழா பொலிவின்றிக் கழிந்தது.இப்போது ஐம்பத்தொன்பதாம் ஆண்டுவிழா அருட்செல்வரின் உயரிய கொள்கைகளுக்கு மாறாக ஏனோ தானோ என நடத்தப்படுகிறது.
மக்கள் மனமாசினைத் துடைத்து உள்ளத்தூய்மையும் அருளும் பெருகும் வகையில் நம் நாட்டையே வழிநடத்திச் சென்ற அருளாளர்கள் நமக்கு விட்டுச் சென்ற சிந்தனைகளை இன்றைய தலைமுறைக்குத் தெளிவுற எடுத்துரைப்பதற்கும் பரப்புதற்குமே இந்த எட்டு நாள் விழாவை அருட்செல்வர் திட்டமிட்டு நடத்திவந்தார்.
ஆனால் எட்டு நாள் விழா இப்போது ஐந்து நாள் விழாவாகக் குறைக்கப்பட்டது எதனால்?
அரங்கினை வழங்கிட ஏ.வி.எம்.நிறுவனத்தார்  ஆயத்தமாக இருக்கும்போது இந்த வேண்டாத சிக்கனம் எதற்கு?
அருள்நெறிச் சான்றோர்களும் தமிழறிஞர்களும் அழைக்கப்படுவதைக் குறைத்துவிடவேண்டும் என்னும் முனைப்பு எழுந்தது எதனால்?
 மொழிபெயர்ப்பு நூல்கள் நாள்தோறும் வெளியிடப்படுவது ஏன்?ஒரு நாளை மொழிபெயர்ப்புத் திருநாள் என அறிவித்து அந்த நூல்களையெல்லாம் அறிமுகப்படுத்தியிருக்கலாம்.காந்தியடிகளுக்கும் வள்ளலார்க்கும் தொடர்பேயில்லாத பத்து நூல்கள் வெளியிட நான்கு நாள்கள் ஏன்?
வள்ளலாரின் வழிவழித் தொண்டராகத் திகழ்ந்துவரும் தூய நெஞ்சத் துறவி ஊரன் அடிகளாரின் பதினோரு வள்ளலார் ஒப்பீட்டு நூல்களுக்கு மட்டும் அரைநாள் ஒதுக்கிவிட்டு விழாவின் நோக்கத்திற்குப் பொருத்தமில்லாத பத்து மொழிபெயர்ப்புநூல்களுக்கு  நான்கு நாள்கள் என்பது எவ்வகையில் அறம்?
காந்தியடிகளுக்கும் சரத்பவாருக்கும் என்ன தொடர்பு?காந்தியடிகள் பிறந்தநாளில் சரத்பவார் நூலை வெளியிடுவதைக் காட்டிலும் காந்தியச் சிந்தனையாளர்களை அழைத்துப் பொழிவாற்றச் செய்திருக்கலாமே?
சுருக்கமாகச் சொன்னால் வள்ளலார்--காந்தியடிகள் விழாவில் வள்ளலார்க்கும் காந்திக்கும் வழங்கப்படவேண்டிய சிறப்பும் மதிப்பும் பறந்துபோனது ஏன்?
இதுதான் அருட்செல்வருக்குச் செய்யும் புகழ்வணக்கமா?



Monday, July 11, 2016

வாழ்க

          உண்மையுள்ள ஒரு கவிஞன்”—ஒப்பற்ற உரைநடைக் காப்பியம்


                                         


கலைமாமணி சுப்பு ஆறுமுகம் என்னும் தன்னிகரிலாத் தலைவரை மையமாகக் கொண்டு ஒன்பான்சுவை மிளிரப் பல்வேறு நிகழ்ச்சிகளையும் பாங்குறத் தொகுத்து அவரது குடும்பமுன்னோடிகளையும், பிறந்து வளர்ந்து பயின்று பாவலராய்ச் சிறந்து கலைத்துறையில் நுழைந்து கலைவாணர் போற்றிய அவரது தலைமாணாக்கராய்த் திகழ்ந்து, வில்லுப்பாட்டுக்கு ஓர் உலகளாவிய அறிந்தேற்பை வழங்கி, உலகம் போற்றும் வில்லிசை வேந்தராய்ப் புகழ்நிறுவிப் பொலிவுறும் வரலாற்றையும், அவர்தம் புதல்விகளும் புதல்வரும் பேரப்பிள்ளைகளும் வளர்ந்து ஆளாகி அவரது கலையின் வழித்தோன்றல்களாக வழிவழித் தொடர்ந்துவரும் திறத்தையும் தொகுத்தளித்தவர் கவிஞரின் துணைவியார் திருமதி.மகாலட்சுமி அம்மா அவர்கள் என்பதை உலகறியும்.
பள்ளியில் அவர்கள் படித்ததோ ஐந்தாம் வகுப்பு.வாழ்க்கைப் பல்கலைக் கழகத்தில் பயின்றதே மிகப் பெரும்படிப்பு.கலைவாணரின் தலைமாணாக்கர் கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்களின் கைப்பிடித்து அவரது இன்பதுன்பங்களில் பங்கேற்று நன்மக்களைப் பெற்றுப் பேரும்புகழும் வாய்த்துப் பேரப்பிள்ளைகளின் அன்பில் திளைக்கிறார்கள்.அவர்களுக்குத்  திருமணம் நடந்து அறுபத்திரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்கள்.
தமது கணவரின் வாழ்க்கைவரலாற்றை எவ்வித உயர்வுநவிற்சியுமின்றி அதே நேரத்தில் உயிரோட்டமாகத் தம் நூலில் வழங்கியுள்ளார்கள்.கவிஞரின் பள்ளிப்பருவத்தையும் கலைவாணரிடம் பணியேற்றுக் கலைத்துறையில் ஈடுபட்ட தொடக்கக்காலத்தையும் மிகச் சுருக்கமாக மூன்றே இயல்களில் வழங்கியுள்ளார்கள்.தம் பதின்மூன்று வயதில் குடும்பவாழ்வை ஏற்ற நாளிலிருந்து நாற்பது ஆண்டுக்கால வாழ்க்கைவரலாற்றை (1954-1994) நாற்பத்தெட்டு இயல்களில் சொல்லோவியமாக வரைந்துள்ளார்கள்.முதல் மூன்று இயல்களில் வழங்கியுள்ள செய்தி தம் கணவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டது என்பதால் சுருக்கமாகவும்  நேரடியாகத் தமக்குத் தொடர்புடைய வரலாற்றை விரிவாகவும் அமைத்துள்ள பாங்கு நன்று.
புலமைக்கும் திறமைக்கும் குறைவேயில்லாத தம் கணவர் இளமையில் வறுமையால் வாட்டமுற்ற செய்தியை மகாலட்சுமி அம்மா நகைச்சுவை ததும்பக்கூறுகிறார்.எப்படி?கவிஞர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவர்;அதனால்  அவர் உடுத்துவதும் ஒரே வேட்டி-ஒரே சட்டை என்று வாழ்க்கைமுறையை அமைத்துக்கொண்டாராம். உடுப்பதற்கு ஒரு வேட்டி,ஒரு சட்டையைத் தவிர வேறேதும் இல்லாத பொருளியல் தட்டுப்பாட்டு நிலையை எத்துணை நயம்படக் கூறுகிறார்!
வறுமையின் அவலத்தைக் காட்டும் பல பகுதிகள் அம்மாவின் சமூகப்பார்வையையும் வெளிப்படையான உள்ளத்தையும் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.நேர்மையாளர்கள் வறுமையுற்றால் அதற்காக அவர்கள் நாணுவதில்லை.நாணவும் வேண்டாம்.அவர்கள் வாழும் சமுதாயம்தான் நாணவேண்டும்.தம்முடைய வீட்டின் அடுப்பில் பூனை தூங்குவதையும் குடிப்பதற்குப் பால் வேண்டித் தம் குழந்தை தாய் முகத்தை(அதாவது தன் மனைவியின் முகத்தை) நோக்குவதையும் தாய்(தன் மனைவி) தமது முகத்தை நோக்குவதையும் கூறி அரசனை நாடிவந்த புலவர் பெருஞ்சித்திரனார் பாடலைப் படிக்கும்போது அப் புலவர் பட்ட துயரம் நம் கண்ணில்  அருவி பொழியவைப்பதைப் போல், அம்மா, பால்பவுடர் வாங்கப் பொருளில்லாச் சூழலில் குழந்தை காந்தி பட்ட துயரத்தைக் கூறும் பகுதியைப் படிப்போர் எவராயினும் இன்றும் இன்னும் நூறு இருநூறு ஆண்டுகள் பின்னரும் அறிஞர்பெருமக்கள் வாழ்வாதாரத்திற்கு எத்தகைய காப்புறுதியும் வழங்காத சமூகநிலையைத் தான் குறைகூறுவார்கள்.
பெருஞ்சித்திரனாரோ மகாலட்சுமி அம்மாவோ சமூகநிலையை ஆவணப்படுத்தியுள்ளனர் என்றுதான் கூறவேண்டும்.இத்தகைய ஆவணங்கள் இனிவரும் தலைமுறையினர்க்குப் பாடமாக அமைந்து சமூகத்தை நன்னிலையில் மேம்படுத்தும் என்பதில் ஐயமும் உண்டோ?
சான்றோர் தாம் படும் இடும்பைக்கு இடும்பை படுப்பர் எனக் கூறும் வள்ளுவர் வாய்மொழிக்கேற்பத் தாம் பட்ட துன்பங்களையெல்லாம் இன்பங்களாகக் கருதிப் பொறுத்தாற்றிய கவிஞரும் மகாலட்சுமி அம்மாவும் இனி வரும் தலைமுறையினர்க்கும் வழிகாட்டும் ஒளிவிளக்குகளாக விளங்குகின்றனர்.
தாம்,தம் கணவர்,மூன்று குழந்தைகள் என ஐவரும் ஒரே அறையுள்ள வீட்டுப்பகுதியில் வாழ்ந்த துயர்நிலையைக் கூட மிக எளிதாக”ஐந்து விரல்கள்;ஒரே உள்ளங்கை” என்னும் உருவகத்தால் அம்மா சொல்லோவியப்படுத்துவது அவரது சான்றாண்மைக்கும் வறுமையிற் செம்மைக் காக்கும் பெருமித உள்ளத்துக்கும் எடுத்துக்காட்டாக அமைகிறது.
வாழ்வின் வளமிக்க பகுதிகளை மட்டும் தொகுத்துரைத்து,தாம் அடைந்த துன்பங்களை மறைத்து அம்மா எழுதியிருக்கலாம்.பிந்தைய தலைமுறையினர்க்கு அத் துன்பங்கள் தெரியவேண்டாம் எனக் கருதி அவ்வாறு செய்திருக்கலாம்.ஆனால் உண்மையை மட்டுமே வாழ்வுநெறியாகக் கொண்டு வாழ்ந்துவரும் கவிஞர் குடும்பத்தினர் வாய்மையிற்குன்றாத சான்றாண்மையாளர்கள் என்பதனை நிறுவும் வகையில் தமது குடும்பம் அடைந்த இன்னல்களையும் இழப்புகளையும் அம்மா தொகுத்துரைத்துள்ளார்கள்,வாழ்க்கை என்பது மலர்ப்படுக்கையன்று என்பதனையும் எத்தகைய இடுக்கண் வந்தாலும் கணவன்,மனைவி ஒன்றுபட்டு வாழ்ந்தால் உயர்நிலை அடையலாம் என்பதனையும் வருங்காலத் தலைமுறையினர்க்கு விளக்கும் வண்ணம் அம்மாவின் வாழ்க்கைவரலாற்று நூல் அமைந்துள்ளது.இது கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்களின் வரலாறாகவும் அம்மாவின் தன்வரலாறாகவும் ஒருங்கிணைந்து விளங்குகிறது.அம்மாவின் தன்வரலாறு கவிஞரின் குடும்பவரலாறாகவும் கவிஞரின் வரலாறு தமிழகத்தின் வரலாறாகவும் விளங்குகின்றன.
தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்களையும் அருளாளர்களையும் தலைவர்களையும் கலைஞர்களையும் அவர்களோடு கவிஞர் கொண்டிருந்த நட்பையும் அவர்கள் கவிஞர் மேல் கொண்டிருந்த பெருமதிப்பையும் பேரன்பையும் இந் நூல்வழி அறிகிறோம்.
இலங்கை,சிங்கப்பூர் என வெளிநாடுகளிலும் கவிஞர் அவர்களின் வில்லிசை பெரிதும் போற்றப்பட்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்துரைத்துள்ளார்.
கவிஞரின் மனிதநேயமும் பெரியோரைப் போற்றும் பண்பும் இளைஞர்களை ஊக்கப்படுத்தி வழிகாட்டும் அன்புள்ளமும் கட்சிச்சார்பற்று அதே நேரத்தில் அனைத்துக்கட்சிகளையும் அன்பால் ஈர்த்து நாட்டுப்பற்றும் நல்லிணக்கமும் நிலவுதற்கு உழைக்கும் பெருங்குணமும் இந் நூலில் காணப்படும் நிகழ்ச்சிகளின் மூலம் வெள்ளீடைமலையென விளக்கமாகின்றன கவிஞரின் ஆளுமைத்திறத்தை நேரடியாக விளக்காமல் இங்ஙனம் வாழ்க்கைநிகழ்ச்சிகளின் மூலம் நாம் தெரிந்துகொள்ளுமாறு நூலாசிரியர் நூலை இயற்றியுள்ள திறம் பாராட்டற்குரியது.
அறுபதாண்டுக் காலமாக ஏழாயிரம் வில்லிசைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ள கவிஞர் தமிழ்நாட்டு வரலாற்றில் சிறந்த கலைஞராக,நாட்டுப்புறக்கலையை மீட்டமைத்த சான்றோராகப் போற்றப்படுவார்.
தொன்மம்,பண்பாடு,வேளாண்மை,தேசியத்தலைவர்கள்,நாட்டுப்பற்று,அறிவியல்,மருத்துவம்,திருக்குறள்,மகாபாரதம்,இராமாயணம்,சிலப்பதிகாரம்,திருவருட்பா எனப் பல்வேறு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு தமிழர்கள் பயனடையும் வண்ணம் வில்லிசைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ள வில்லிசை வேந்தரின் பணியை அவரது மகன்,மகள்,மருமகன்,பேரன் எனக் குடும்ப உறுப்பினர்களும் தொடர்வது நமக்கு மகிழ்ச்சியையளிக்கிறது
தன்னிகரில்லாக் கவிஞரைத் தலைவராகக் கொண்டு ஓர் உரைநடைக் காப்பியமாக அவரது வாழ்க்கைவரலாற்றை வழங்கியுள்ள அம்மாவின் பணியைப் போற்றி நன்றி நவில்வோம்.
12/7/16 அன்று கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்களின் 89-ஆம் பிறந்தநாள்விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தில் நடைபெறுகிறது.இலக்கிய இணையர் இருவரையும் அவர்களது புதல்வியர்,புதல்வர்,பேரப்பிள்ளைகள் அனைவரையும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவோம்.


                                                






























Saturday, January 30, 2016

                                                      பாண்டே  நேர்காணல்

பாண்டே  “நேர்காணல்”
பாண்டே: ஐயா!வணக்கம்.நான்கும் நான்கும் சேர்வதால் வரும் விளைவு பற்றி இன்றைய நேர்காணல் அமைகிறது.தங்கள் கருத்தைக் கூறுங்கள்.

தலைவர் பச்சையப்பன்: நான்கும் நான்கும் எட்டு என்பதில் என்ன ஐயம்.

பாண்டே:அப்படியானால் ஏழும் ஒன்றும் எட்டு இல்லை என்கிறீர்களா?

தலைவர் ப.:நான் அவ்வாறு எதுவும் கூறவில்லையே.

பாண்டே” சற்று முன்பு நீங்கள் நான்கும் நான்கும் எட்டு என்றுதானே கூறினீர்கள்?

தலைவர்:உங்கள் கேள்வி அப்படி இருந்ததால்தான் அதனைக் கூறினேன்.அதற்காக ஏழும் ஒன்றும் எட்டு இல்லை என்று ஆகிவிடுமா?
பாண்டே:பார்த்தீர்களா? பார்த்தீர்களா? சென்ற முறை இங்கே  நேர்காணலுக்கு வந்தபோது ஆறும் இரண்டும் எட்டு எனக் கூறினீர்கள்.இப்போது உங்கள் வசதிக்காக அதனை ஏன் மறைத்துவிட்டீர்கள்?

தலைவர்:நீங்கள்தான் மாறிமாறிப் பேசுகிறீர்கள்.உங்கள் கேள்விக்கு ஏற்பவே என் கருத்தைத் தெரிவித்தேன்.நீங்கள் குழப்புவதால் இப்போது எல்லாவற்றையும் சொல்லுகிறேன்.நான்கும் நான்கும் எட்டு.ஆறும் இரண்டும் எட்டு.ஏழும் ஒன்றும் எட்டு.ஐந்தும் மூன்றும் எட்டு.

பாண்டே:இதுதான் உங்கள் உறுதியான முடிவா?

தலைவர்:ஆமாம்.இதுதான் என் உறுதிவாய்ந்த முடிவு.

பாண்டே: நேயர்களே!இப்போது தலைவர் ‘ப’கூறிய கருத்தைக் கேட்டீர்கள்.அவர் சில உண்மைகளை மறைக்கப்பார்க்கிறார்.பத்தில் இரண்டு போனால் எட்டு.ஒன்பதில் ஒன்று போனால் எட்டு.பதினொன்றில் மூன்று போனால் எட்டு.பன்னிரண்டில் நான்கு போனால் எட்டு.இந்தச் செய்திகளையெல்லாம் தலைவர் ஏன் விட்டுவிட்டார்.அவருக்குத் தேவையானதை மட்டுமே அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.இதனை உங்கள் கவனத்திற்குக் கொணரவிரும்புகிறேன்.
தலைவர் சீற்றத்துடன் எழுந்து:என்னய்யா!நேரத்துக்கு ஒரு பேச்சுப் போல் அமைந்துள்ளதே!என்ன நேர்காணலய்யா நடத்துகிறீர்கள்?(வெளீநடப்புச் செய்கிறார்.?

(உங்களுக்குத் தலைசுற்றினால் பொறுத்தருள்க.)

Friday, April 24, 2015

செயகாந்தனும் வைரமுத்துவும்



        செயகாந்தனும் வைரமுத்துவும்

வாழும்போது திறனாய்வு செய்தாலும் மறைந்தபின்னர் வானளாவப் புகழ்வது தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகளில் தலையாய ஒன்று.
”இறந்தார் எல்லாரும் பெரியர்’ எனப் போற்றுவது நம் பெருந்தன்மைக்கு அடையாளமாக இருக்கலாம்;எனினும் ஆராய்ச்சிக்கு ஏற்புடைய ஒன்று எனக் கொள்ளமுடியுமா?
செயகாந்தன் தாம் வாழ்ந்தகாலத்தில் கடுமையாகத் திறனாய்வு செய்யப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர்;அதேநேரத்தில் ஆட்சியாளரின் அரவணைப்பும் ஊடகங்களின் உற்ற துணையும் மிகுதியாகப் பெற்றவரும் அவரே என்பதை மறுக்க இயலாது.எந்த எழுத்தாளரும் இதுவரை பெற்றிராத வருவாயும் விருதுகளும் மத்திய மாநில அரசுகளின் பல குழுக்களில் உறுப்பாண்மையும் பெற்றுப் பொலிந்தவரும் அவரே.
மறைந்துவிட்டார் என்பதற்காக அவர் ‘மகாத்மா’ ஆகிவிட்டார் என்று பொருளா?அவரை ஆங்கில நாளிதழ்கள் மிகவும் துணிவும் நெஞ்சுரமும் மிக்க எழுத்தாளர் எனப் புகழ்வது நகைப்புக்கிடமளிக்கிறது.பாரதிதாசன் மறைவின்போது ‘காலமானார்’பகுதியில் ஒருவரிச் செய்தி வெளியிட்ட ஆங்கில நாளிதழ்கள் செயகாந்தனை மட்டும் ‘புரட்சிச் சிந்தனையாளராகப் போற்றுவது ஏன்”அவர் அப்படித் துணிச்சலாக என்ன செய்துவிட்டார்?காவல்துறைப் பதிவேடுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையே பதிவு பெற்றிருந்தாலும்,உண்மையிலேயே 1300 தமிழர்களின் உயிரைக் காவுவாங்கிய காங்கிரசு ஆட்சியை--இந்தி எதிர்ப்புப்போரில் பக்தவத்சலம் நடத்திய ’இட்லர் தர்பாரை’--எதிர்த்து ஒரு சொல்லாவது கூறினாரா?மொழிப்போரில் உயிர்நீத்த தன்மானத் தமிழர்களின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்தோ அவர்களின் தியாகத்தைப் போற்றியோ அவர் சாகும்வரை என்றாவது பேசினாரா?எழுதினாரா?
’நெருக்கடி நிலை’ அறிவித்துவிட்டுத் தமது அரசியல் எதிரிகளை வஞ்சம் தீர்க்கும்வகையில் கடுஞ்சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்திய இந்திரா காந்தியின் வல்லாட்சியைக் கடிந்துரைத்துத் தமது நெஞ்சுரத்தை வெளிப்படுத்தினாரா?இல்லையே!மாறாக அந்த நேரத்தில் இந்திரா காந்திக்கு வெண்சாமரம் வீசும் அடிமைகளுள் ஒருவராகத்தான் ‘துணிச்சல்’மிக்க செயகாந்தன் விளங்கினார்.
அவர் அப்படி  துணிச்சலோடு என்ன செய்துவிட்டார்?அதற்குமுன்னர் வெளிப்படையாக எழுதப்பெற்றிராத ஒழுக்கப்பிறழ்ச்சிகளைத் ‘துணிச்சலோடு எழுதியவர் செயகாந்தன்.இந்தத் துணிச்சல் பொழுதுபோக்கு இதழ்களுக்குப் பெரும் வருவாயை ஈட்டித் தந்தது.
விளிம்புநிலை மக்களைக் கதைமாந்தராகக் கொண்டு எழுதிய எழுத்தாளர்கள் பெருகிவந்த நேரத்தில் அவரும் அங்ஙனமே எழுதியதில் சிறப்பு ஏதுமில்லை.ஆனால் அப்படி எழுதிய எழுதுகோலாலேயே உயர்சாதியினரின் வாழ்வியலையும் எழுதிய ‘சிறப்பு’க்குரியவர் அவர்மட்டுமே.
ஒளிவுமறைவில்லாமல் கஞ்சா அடிப்பதையும் போதைப்புகை’ பிடிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்த செயகாந்தன் காந்தியடிகளைப் பற்றியும் உயரறங்களையும் எழுதியதுகூடத் துணிச்சல்மிக்க செயல்தான்.
பொழுதுபோக்கு இதழ்களின் புகலிடமாகத் திகழ்ந்த பெருமைக்குரிய செயகாந்தன் சனாதனிகளின் காவலராகவும் விளங்கினார்.பொதுவுடைமைப் பாசறையிலும் இடம்பெற்றுக்கொண்டு ‘சய சய சங்கர’ எனப் போற்றி பாடிய புரட்சிக்காரர் அவர் என்பதால் அவரது புரட்சியுள்ளத்தை ஆங்கில நாளிதழ்கள் வானளாவப் போற்றுவதில் வியப்பில்லை.
எதிர்ப்புகளை மீறி எதிர்நீச்சலிட்டு உயரத்துக்கு வந்த கருணாநிதியும் எம்.சி.ஆரும் செயகாந்தன் வழங்கும் தரக்குறைவான ‘அரசியல் திறனாய்வு’கண்டு அதிர்ந்தார்கள்.எம்.சி.ஆர்.அஞ்சவில்லை.ஆனால் கருணாநிதி அஞ்சினார்.தமது ஆட்சிக்காலத்தில் பொருளுதவிகளும் சலுகைகளும் வாரிவழங்கினார்.
தூயதமிழைப் போற்றுவாரும் பேணுவாரும் நாவால் தன்னைத் தூய்மை செய்துகொள்ளும் நாயைப் போன்றவர்கள் என “முழங்கிய” செயகாந்தனைச் செம்மொழி நிறுவனத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினராக்கினார் கருணாநிதி.
தொல்காப்பியர் விருது பெறத் தகுதிவாய்ந்தவரைத் தெரிவு செய்யும் பொறுப்பு வாழ்நாளெல்லாம் தமிழுக்குப் பகைமை பூண்டிருந்த செயகாந்தனுக்குக் கருணாநிதியால் வழங்கப்பட்டது.தமிழைப் பழித்துக்கொண்டே தமிழ் வளர்க்கும் நிறுவனத்தில் தலைமைப்பங்கு பெற்றது செயகாந்தனின் அருஞ்செயல் எனலாம்.இங்கே குறை செயகாந்தனிடம் இல்லை;கருணாநிதியின் தமிழுணர்வு உண்மையானதுதானா என்னும் ஐயத்தை ஏற்படுத்தும் நிகழ்வுளில் இதுவும் ஒன்று.
நம் கட்டுரை திசைமாறிவிடவேண்டாம்.செயகாந்தன் சனாதனிகளின் சார்பாளர்;பொழுதுபோக்கு இதழ்களின் செல்லப்பிள்ளை;ஆட்சியாளர்களின் அரவணைப்பில் வளர்ந்தவர் என்னும் உண்மைகளை எஞ்ஞான்றும் மறக்கவேண்டாம்.
வைரமுத்து,பாரதிதாசன் தலைமுறைப் பாவலர்களின் அடுத்த தலைமுறையில் பாரதிதாசனின் பாடுநேறிகளில் நடையிட்டவர்;தமிழ்வீறும் பெரியாரியமும் அவர் ’போற்றிய’(இறந்தகாலத்தில் குறிப்பிடுவது-அவரின் நிகழ்காலத் தடுமாற்றங்களை மனத்துள் கொண்டே) விழுமியங்கள் எனலாம்.
போற்றிப்பாராட்ட எதுவுமில்லாத செயகாந்தனுக்கு வாய்த்த விளம்பரவெளிச்சத்தைத் த்ம் மீது பாய்ச்சிக்கொள்ளத் துடித்த,துடிக்கும் வைரமுத்துவுக்குச் சொந்தச் சிந்தனை எதுவுமே கிடையாதா?
திராவிட இயக்கத்தின் அரவணைப்பில் வளர்ந்த வைரமுத்து, வாழ்நாளெல்லாம் திராவிட இயக்கத்தைப் பழித்துரைப்பதே வாடிக்கையாகக் கொண்டிருந்த செயகாந்தன் பாராட்டுரையே தமக்குத் தேவையான புகழ்மகுடம் என்னும் முடிவுக்கு வந்தது ஏன்?
காவல்துறையில் அறிவித்தால் இந்தியக் குற்றவியல் சட்டம்-420 பிரிவில் சிறைப்படுத்தக்கூடிய ஒரு செயலைக் ’கவிப்பேரரசு’ செய்யலாமா?ஏன் இந்த விளம்பரவெறி?
இன்றைய தமிழ்ச்சமுதாயம் விளம்பரம் பெற்றவர்களை விண்ணளாவ உயர்த்திப் போற்றுவதைத் தனது வழமையாகக் கொண்டுள்ளது.என் நினைவுக்குத் தெரிந்து பாரதிதாசன் மறைவின்போது அவருக்கு நினைவேந்தலாக ஊருக்கு ஒரு கூட்டம் என்று கூடக் கூடவில்லை.ஆனால் வாலி மறைவின்போது இந்தியாவில் மட்டுமில்லை,உலகெங்கும் நினைவேந்தல் கூட்டங்கள்!இணையதளத்தில் இமயமெனக் குவிந்த புகழ்மாலைகள்!
தெளிந்த சிந்தனையுடன் செயல்படும் புலம்பெயர்தமிழர்களும் இதற்கு விதிவிலக்கல்லர்.
விளம்பர மனிதர்களின் பின்னால் விரைந்து ஓடும் தமிழ்ச்சமுதாயம் சொந்த சிந்தனை சிறிதுமற்ற செம்மறியாட்டுக் கூட்டமாக மாறிவிட்டது.இந்த அழகில் பகுத்தறிவையும் தன்மானத்தையும் தூண்டிவிட்டுத் தமிழனைச் சூடு,சுரணை,சுயமரியாதை உள்ள மனிதனாக மாற்றப் பாடுபட்ட பெரியாருக்குச் செருப்படி!
திருக்குறளைப் பாராட்டிவிட்ட ஒரே காரணத்துக்காக இந்திக்காரருக்கு முந்திக்கொண்டு பரிவட்டம் கட்டும் தமிழர்கள்,திருக்குறள்தான் தமிழர்தம் வாழ்வியல்வழிகாட்டி என அடையாளம் காட்டிய பெரியாரை அவமதிப்பது எதனால்?
வீழ்ச்சியைநோக்கி விரைந்துகொண்டிருக்கிறது தமிழினம்.
சிந்தித்துச் செயலாற்றவேண்டிய பொறுப்பு மானமுள்ள ஒவ்வொருவருக்கும் உள்ளது.

Friday, March 13, 2015

தடுமாறும் தமிழ் அமைப்புகள்



தடுமாறும் தமிழ் அமைப்புகள்
”கெடல் எங்கே தமிழின் நலம்-அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க”எனப் பாரதிதாசனார் முழங்கினார்.எனக்குத் தெரிந்து இதனையே தமது வாழ்வுநெறியாகக் கொண்டு தமது வாழ்நாளெல்லாம் போராடி மறைந்த ஒரே போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தான்.
1967-ஆம் ஆண்டுக்கு முன்னால் வீட்டுக்கு வெளியே வரக் கூடத் தயங்கிய பலர் 67-க்குப் பிறகு தமிழ் அமைப்புகள் நிறுவியும் தமிழ்விழாக்கள் நடத்தியும் தமது இருப்பைத் தெரிவித்துக்கொண்டனர்.தமிழ்விழாக்களின் மூலம் தி.மு.க.அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுடன் தொடர்பு கொள்வதும் அவர்களுக்குக் கிடைத்த எதிர்பாராத ஆதாயமாயிற்று.
எழுபதுகளின் தொடக்கத்தில் தி.மு.க. படித்தவர்களிடம் செல்வாக்கு இழக்கத் தொடங்கியது.அந்த நேரத்தில் தமிழ் அமைப்புகள் தி.மு.க.வைத் தமிழின் பெயரால் எதிர்ப்பது ஒரு வழமையாயிற்று.பெரும்பாலான தமிழ் அமைப்புகளின் ஒரே கொள்கை தி.மு.க.வைத் தமிழ்த்துரோகம் புரிந்த கட்சியாகச் சாடுவது மட்டுமே என்றாயிற்று.
தி.மு.க.வுக்குத் தகுந்த மாற்று அமைப்பாகப் பெருஞ்சித்திரனார் தோற்றுவித்த உ.த.க.குழுப்பூசலால் பல அமைப்புகள் உருவாகக் காரணமாயிற்று.அவற்றுள் தமிழ்க்குடிமகன் தொடங்கிய தமிழியக்கம் ஒரு சில ஆண்டுகள் செயலாற்றியது.
அ.தி.மு.க.ஆட்சி வந்த பின்னர் நிறையத் தமிழ் அமைப்புகள் அங்கங்கே முளைக்கத் தொடங்கின.இவை உருப்படியாக ஏதேனும் சாதித்தனவா எனில் விடையளிக்க ஒன்றுமில்லை.
த.சுந்தரராசன் தோற்றுவித்த தலைநகர்த் தமிழ்ச்சங்கம் ஆக்கவழியில் செயற்படத் தொடங்கியதனை இங்குக் குறிப்பிட்டாகவேண்டும்.ஏறக்குறைய பெங்களூர்த் தமிழ்ச்சங்கம் கருநாடகத்தில் செயற்படுவது போல அதற்கு இணையாகத் தலைநகர்த் தமிழ்ச்சங்கம் செயற்படுகிறது எனலாம்.
தி.மு.க.நிழலில் இருந்தாலும் அனைத்துக்கட்சி அன்பர்களையும் ஒருங்கிணைத்து அவ்வப்போது போராட்டம் நடத்திய,நடத்திவருகிற பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் போராட்டத்தையே தமது வாழ்வியலாகக் கருதி வருபவர் எனலாம்.
மாணவர் நகலகம் அருணாசலம் தோற்றுவித்த ’சான்றோர் பேரவை’ தமிழ்நாட்டில் பல தமிழ் ஆர்வலர்களை ஒரே குடையில் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தி வரலாறு காணா அருஞ்செயலாற்றியது.இந்த நல்ல அமைப்பு முறிந்து சிதைந்து போனது தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு துயர்நிகழ்வாகும்.
ஏனைய தமிழ் அமைப்புகள் குறிப்பிட்டுக் கூறும் அளவு இன்னும் ஒரு தெளிவான வடிவம் எடுக்கவில்லை எனலாம்.தமிழை,தமிழ்நலனைக் கருத்திற் கொண்டு தொடங்கப்பெற்றுள்ள அனைத்து அமைப்புகளுக்கும் என் பணிவான வணக்கங்கள்.அனைத்தையும் ஒருங்கு திரட்டிப் பெயர் தெரிவிக்க என்னால் இப்போது இயலவில்லை.எனினும் அந்த அமைப்புகள் விவரம் வழங்கினால் இணையத்தில் நிலையாகப் பதிந்துவைக்க விழைகிறேன்.
புலவர்மணி இளங்குமரனார்,பாவலர் இராமச்சந்திரன்,கல்பாக்கம் வ.வேம்பையன்,ஒரத்தநாடு இறையெழிலன்,புதுவைத் தமிழமல்லன் எனச் சிலர் நெடுநாள்களாகத் தமிழ்நலன் குறித்துச் சிந்தித்தும் உழைத்தும் வருவதனை நான் அறிவேன்.
 மாற்று அரசியல் நடத்தும் நோக்கில் ஈழத் தமிழர் சிக்கலை மையமாக்க் கொண்டு தொடங்கிய பல அமைப்புகள் இன்று தம்மை அரசியல் இயக்கங்களாகவே கருதிக்கொண்டு விளம்பரத்திற்காகவும் செல்வாக்குப் பெறவும் அவ்வப்போது பல போராட்டங்களை நடத்திவருகின்றன.
தி.மு.க.வை வசைபாடுவதையே தமது முதன்மையான நோக்கமாக்க் கொண்டு இயங்கிவரும் தமிழ் அமைப்புகள் முதலில் தமது எதிர்மறையான அணுகுமுறைகளைக் கைவிட வேண்டும்.
இலங்கைக்கு நம் தலைமையமைச்சர் மோதி புறப்பட்டுச் சென்றபின் ’இலங்கைக்குப் போகாதீர்’ எனப் போராடுவதில் பொருளுண்டா?
மோதி செல்லும் செய்சல்சு,மோரிசியசு,இலங்கை மூன்றுமே புலம்பெயர்தமிழர் வாழும் நாடுகளாகும்.எனவே அங்குச் செல்லும்போது நமது தமிழ்நாட்டு முதலமைச்சரையும் அழைத்துச் செல்வதே பொருந்தும் என வலியுறுத்தலாமல்லவா?
தமிழை மறந்த அந் நாட்டுத் தமிழர்களுக்குத் தமிழ்க்கல்வி வழங்க மைய அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளவேண்டாமா?
நடந்தது என்ன?மோரிசியசு நாட்டின் இரு கண்களாக போசுபூரி மொழியினமும் தமிழினமும் விளங்கிவருகின்றன. மோரிசியசு வரலாற்றில் அங்கே முதன்முதலாக்க் குடிபெயர்ந்தவர் புதுவையிலிருந்து வந்த தமிழர்களே என்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
எனவே மோரிசியசு அரசு (இந்தியின் கிளைமொழியாகிய)போசுபூரி மொழியையும் தமிழையும் இணையாகப் போற்றிவருகிறது.
தமிழ்நாட்டில் மாறிமாறி ஆட்சிபுரிந்த தி.மு.க.,அ.தி.மு.க. அமைப்புகள் புலம்பெயர் தமிழர்களுக்காக எதனையும் உருப்படியாகச் செய்யவில்லை.
உலகெங்கும் பரந்து வாழும் மலையாளிகள் நலனுக்குக் கேரள அரசுகள் ஆற்றிவரும் பணியை நம் மாநில அரசுகள் முன்னோடியாக்க் கொண்டிருக்கவேண்டும்.
என்ன நடந்துள்ளது? மோரிசியசு நாட்டில் உலக இந்தி இயக்ககம் செயற்பட மைய அரசு நூறு கோடி உரூபா கொடுத்துள்ளது.அந்தப் பணத்தில் கட்டப்பட்ட கட்டட்த்தை மோதி திறந்துவைத்துள்ளார்.
இந்திக்கு நூறு கோடி உரூபா என்றால் தமிழுக்குப் பாதியாவது கிடையாதா?பாதி கூட வேண்டாம்,ஒரு பத்துக் கோடியாவது தரக்கூடாதா என அங்குள்ள தமிழர்கள் நெடுநாளாகக் கேட்டுவருகின்றனர்.
இவர்கள் குரலை இங்கே யார் ஒலிக்கப்போகிறார்கள்?
தமிழர்களும் போசுபூரியினரும் ஒன்றுபட்டுவாழும் மோரிசியசு நாட்டில் இந்திக்கு மட்டும் ஏராளமாக நிதி கொடுத்துதவும் ஓரவஞ்சனை ஒருபுறமிருக்க,இப்போது அங்கே இந்தி வளர்ந்திட,இந்தி மேலோங்கிட ஆவன செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார் நம் நாட்டுத் தலைமையமைச்சர்.
அப்படியென்றால் தமிழின் நிலை?
மோரிசியசு இன்னொரு சிரீலங்கா ஆகப்போகிறதா?
இந்திக்காரர்கள் தான் முதல்தரக் குடிகளா?
மோதி எதற்கு அடித்தளம் நாட்டியுள்ளார்?
நிழல்களோடு போராடும் தமிழ் அமைப்புகள் நிலைமையைப் புரிந்துகொள்ளுமா?

Monday, November 10, 2014

சேதுமதி அம்மா



சேதுமதி அம்மாவின் நினைவைப் போற்றுவோம்

                        
     செந்தமிழ்த் தாய் சேதுமதி அம்மாவின் நினைவுக்கு
வந்தனை செய்வோம்.வணங்குவோம்.
இன்று மட்டுமல்ல என்றும் என்றென்றும்
அவர் நினைவைப் போற்றுவது நம் கடன்.
ஆசிரியராகவே இருபத்துநான்கு மணிநேரம்
அயராப் பணியாற்றியவர் அவர்  என்பது தெரியுமா?
பகலில் பள்ளியில் ஆசிரியர்;
இரவில் இல்லத்தில் தம் பிள்ளைகளுக்கும் நல்லாசிரியர்;
     பகலிலும் இரவிலும் நம் பெருங்கவிக்கோ அவர்களுக்குப்
     பேராசிரியர்;
வறுமையைக் கண்டு அஞ்சிவிடாமல் திறமையைப்
பெருக்கிடும் வழிமுறை சொன்ன
பேராசிரியர்;
படித்துப் படித்துப் பட்டங்கள் பெறவைத்த வழிகாட்டி;
தமிழ்நலன் காக்கும் போராட்டங்களில்
தளர்ச்சி நீக்கிடும் ஊக்க ஊற்று;
துன்பத்தால் துவண்டுவிடாமல் வா.மு.சே.வுக்கு
உற்ற துணையாய் விளங்கிய அன்புத்தோழி;
அம்மாவுக்கு நிகர் அம்மாதான் அவருக்கு முன்னால்
மற்ற அம்மாக்களெல்லாம் சும்மாதான்!
கவியரசரை உருவாக்கிய காரிகை;
திருவள்ளுவருக்கே நீதிநெறி போதித்த  அறிவரசி;
ஆண்டவர் போற்றிடும் அன்னை!
மணிகண்டன் பணிந்திடும் மாதரசி;
பூங்கொடிக்கு மலர்ச்சி நல்கிய தென்றல்;
காப்பியங்களைப் படைத்துத் தள்ளிய பெருங்கவிக்கோவைக்
கவர்ந்த காப்பியம்-சேதுமதி!
மனைக்கு விளக்காக மனத்திற்கு ஒளியாக
சினத்தால் வா.மு.சே.சீறும்போது
கசியும் அன்பால் தணியச்செய்த கங்கையாக
விருந்தினர் குழுமித் திரண்டிடும் வேளையில்
அன்புடன் விருந்தோம்பும் அமுதசுரபியாக
வா.மு.சே அவர்களுக்கு வாய்த்த கொடையாக
சேதுமதி அம்மா சிறப்புறத் திகழ்ந்தார்.
கமண்டலத்தில் அகத்தியர் கடலை அடக்கினாராம்!
இதிலென்ன வியப்பு?
வா.மு.சே என்னும் சூறாவளியையே
சேதுமதி அம்மா  தம் ஆளுமையில்
அடக்கிவைத்திருந்தாரே?
ஒண்டமிழ்க்குக் கேடுற்றால்
ஓயாது குமுறும் வா.மு.சே. என்னும்
எரிமலையையே சேதுமதி அம்மா
தம் அன்பால் அடக்கினாரே!
தமிழினத்தின்
வாழ்வுக்கு  முன்னேற்றம் சேர்ப்பதே
தம் குறிக்கோளென
வாழ்நாளெல்லாம் முயற்சி செய்பவர்
வா.மு.சே. ஒருவர் தானே?
தமிழ்ச்சான்றோர்க்குத் தலைவணங்கி
தமிழ்ப்பகைவர்க்கு வணங்காமுடியாய்ப் பிணங்கி
கிளர்ச்சியும் போராட்டமுமே தம் வாழ்வுநெறியென
ஓயாது செயற்படும் இந்த இராவணனுக்கு
இராமன் என எப்படிப் பெயர் வைத்தார்கள்?
விடை கிடைத்தது!
சேது அவர்களைத் தவிர
வேறெந்த மாது ஒருத்தியையும்
மனத்தால் எண்ணா மாண்புடைய இராமன் என்பதால்
சேதுராமன் ஆனார்!
ஆதிராமனோ ஆரியர்திலகம்!
சேதுராமனோ செந்தமிழ்த் தலைவர்
ஒவ்வொரு நொடியும் ஒண்டமிழ் நலனே
செவ்விதிற் காக்கச் செயற்படும் மறவர்
அற்றைக் கீரர் பிற்றை இலக்குவர்
ஓருருக் கொண்ட அஞ்சா நெஞ்சினர்
அன்னைத் தமிழ்நலன் போற்றிடும் பணியில்
சென்னைக் கோட்டை தில்லிசெங் கோட்டை
அண்ணல் இவரது அறிவுரை கேட்கும்
ஆட்சி  பயிற்சி அனைத்துத் துறையிலும்
மாட்சி பெற்று மாத்தமிழ் சிறந்திட
வாழ்நாளெல்லாம் வருந்தி உழைப்பவர்
அன்னை சேதுமதி அவர்களைத் தவிர
வேறெந்த மாது ஒருத்தியையும்
மனத்தால் எண்ணா மாண்புடைய இராமன் என்பதால்
சேதுராமன் ஆனார்!
தமிழுக்குத் தொண்டாற்ற
கட்சிவேறுபாடு கடந்து தமிழர்களை
இணைக்கும் சேது பாலம் வா.மு.சே.
எந்த ஆட்சியின் தயவும் இன்றி
என்றும் எமை இணைக்கும்
சேது பாலம் வா.மு.சே.
அன்னை சேதுமதி அவர்களின் மறைவால்
அயர்வும் தளர்வும் சிறிதும் இன்றி
முன்னைப் போலவே வா.மு.சே.உழைத்திட
முழுமனத்துடன் துணைபுரிதல் நம் கடன்!
விழுமிய சேதுமதியின் துணைபோல்
கெழுமிய நட்பு கிட்டுவது அரிது!ஆயினும்
பொன்வைக்குமிடத்தில் பூவாக
நம் துணை அமையுமே!
சேதுமதி அவர்களுக்கு வீர வணக்கம்!
செந்தமிழ்த்தாய்க்கு வீரவணக்கம்.