Pages

Monday, July 11, 2016

வாழ்க

          உண்மையுள்ள ஒரு கவிஞன்”—ஒப்பற்ற உரைநடைக் காப்பியம்


                                         


கலைமாமணி சுப்பு ஆறுமுகம் என்னும் தன்னிகரிலாத் தலைவரை மையமாகக் கொண்டு ஒன்பான்சுவை மிளிரப் பல்வேறு நிகழ்ச்சிகளையும் பாங்குறத் தொகுத்து அவரது குடும்பமுன்னோடிகளையும், பிறந்து வளர்ந்து பயின்று பாவலராய்ச் சிறந்து கலைத்துறையில் நுழைந்து கலைவாணர் போற்றிய அவரது தலைமாணாக்கராய்த் திகழ்ந்து, வில்லுப்பாட்டுக்கு ஓர் உலகளாவிய அறிந்தேற்பை வழங்கி, உலகம் போற்றும் வில்லிசை வேந்தராய்ப் புகழ்நிறுவிப் பொலிவுறும் வரலாற்றையும், அவர்தம் புதல்விகளும் புதல்வரும் பேரப்பிள்ளைகளும் வளர்ந்து ஆளாகி அவரது கலையின் வழித்தோன்றல்களாக வழிவழித் தொடர்ந்துவரும் திறத்தையும் தொகுத்தளித்தவர் கவிஞரின் துணைவியார் திருமதி.மகாலட்சுமி அம்மா அவர்கள் என்பதை உலகறியும்.
பள்ளியில் அவர்கள் படித்ததோ ஐந்தாம் வகுப்பு.வாழ்க்கைப் பல்கலைக் கழகத்தில் பயின்றதே மிகப் பெரும்படிப்பு.கலைவாணரின் தலைமாணாக்கர் கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்களின் கைப்பிடித்து அவரது இன்பதுன்பங்களில் பங்கேற்று நன்மக்களைப் பெற்றுப் பேரும்புகழும் வாய்த்துப் பேரப்பிள்ளைகளின் அன்பில் திளைக்கிறார்கள்.அவர்களுக்குத்  திருமணம் நடந்து அறுபத்திரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்கள்.
தமது கணவரின் வாழ்க்கைவரலாற்றை எவ்வித உயர்வுநவிற்சியுமின்றி அதே நேரத்தில் உயிரோட்டமாகத் தம் நூலில் வழங்கியுள்ளார்கள்.கவிஞரின் பள்ளிப்பருவத்தையும் கலைவாணரிடம் பணியேற்றுக் கலைத்துறையில் ஈடுபட்ட தொடக்கக்காலத்தையும் மிகச் சுருக்கமாக மூன்றே இயல்களில் வழங்கியுள்ளார்கள்.தம் பதின்மூன்று வயதில் குடும்பவாழ்வை ஏற்ற நாளிலிருந்து நாற்பது ஆண்டுக்கால வாழ்க்கைவரலாற்றை (1954-1994) நாற்பத்தெட்டு இயல்களில் சொல்லோவியமாக வரைந்துள்ளார்கள்.முதல் மூன்று இயல்களில் வழங்கியுள்ள செய்தி தம் கணவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டது என்பதால் சுருக்கமாகவும்  நேரடியாகத் தமக்குத் தொடர்புடைய வரலாற்றை விரிவாகவும் அமைத்துள்ள பாங்கு நன்று.
புலமைக்கும் திறமைக்கும் குறைவேயில்லாத தம் கணவர் இளமையில் வறுமையால் வாட்டமுற்ற செய்தியை மகாலட்சுமி அம்மா நகைச்சுவை ததும்பக்கூறுகிறார்.எப்படி?கவிஞர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவர்;அதனால்  அவர் உடுத்துவதும் ஒரே வேட்டி-ஒரே சட்டை என்று வாழ்க்கைமுறையை அமைத்துக்கொண்டாராம். உடுப்பதற்கு ஒரு வேட்டி,ஒரு சட்டையைத் தவிர வேறேதும் இல்லாத பொருளியல் தட்டுப்பாட்டு நிலையை எத்துணை நயம்படக் கூறுகிறார்!
வறுமையின் அவலத்தைக் காட்டும் பல பகுதிகள் அம்மாவின் சமூகப்பார்வையையும் வெளிப்படையான உள்ளத்தையும் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.நேர்மையாளர்கள் வறுமையுற்றால் அதற்காக அவர்கள் நாணுவதில்லை.நாணவும் வேண்டாம்.அவர்கள் வாழும் சமுதாயம்தான் நாணவேண்டும்.தம்முடைய வீட்டின் அடுப்பில் பூனை தூங்குவதையும் குடிப்பதற்குப் பால் வேண்டித் தம் குழந்தை தாய் முகத்தை(அதாவது தன் மனைவியின் முகத்தை) நோக்குவதையும் தாய்(தன் மனைவி) தமது முகத்தை நோக்குவதையும் கூறி அரசனை நாடிவந்த புலவர் பெருஞ்சித்திரனார் பாடலைப் படிக்கும்போது அப் புலவர் பட்ட துயரம் நம் கண்ணில்  அருவி பொழியவைப்பதைப் போல், அம்மா, பால்பவுடர் வாங்கப் பொருளில்லாச் சூழலில் குழந்தை காந்தி பட்ட துயரத்தைக் கூறும் பகுதியைப் படிப்போர் எவராயினும் இன்றும் இன்னும் நூறு இருநூறு ஆண்டுகள் பின்னரும் அறிஞர்பெருமக்கள் வாழ்வாதாரத்திற்கு எத்தகைய காப்புறுதியும் வழங்காத சமூகநிலையைத் தான் குறைகூறுவார்கள்.
பெருஞ்சித்திரனாரோ மகாலட்சுமி அம்மாவோ சமூகநிலையை ஆவணப்படுத்தியுள்ளனர் என்றுதான் கூறவேண்டும்.இத்தகைய ஆவணங்கள் இனிவரும் தலைமுறையினர்க்குப் பாடமாக அமைந்து சமூகத்தை நன்னிலையில் மேம்படுத்தும் என்பதில் ஐயமும் உண்டோ?
சான்றோர் தாம் படும் இடும்பைக்கு இடும்பை படுப்பர் எனக் கூறும் வள்ளுவர் வாய்மொழிக்கேற்பத் தாம் பட்ட துன்பங்களையெல்லாம் இன்பங்களாகக் கருதிப் பொறுத்தாற்றிய கவிஞரும் மகாலட்சுமி அம்மாவும் இனி வரும் தலைமுறையினர்க்கும் வழிகாட்டும் ஒளிவிளக்குகளாக விளங்குகின்றனர்.
தாம்,தம் கணவர்,மூன்று குழந்தைகள் என ஐவரும் ஒரே அறையுள்ள வீட்டுப்பகுதியில் வாழ்ந்த துயர்நிலையைக் கூட மிக எளிதாக”ஐந்து விரல்கள்;ஒரே உள்ளங்கை” என்னும் உருவகத்தால் அம்மா சொல்லோவியப்படுத்துவது அவரது சான்றாண்மைக்கும் வறுமையிற் செம்மைக் காக்கும் பெருமித உள்ளத்துக்கும் எடுத்துக்காட்டாக அமைகிறது.
வாழ்வின் வளமிக்க பகுதிகளை மட்டும் தொகுத்துரைத்து,தாம் அடைந்த துன்பங்களை மறைத்து அம்மா எழுதியிருக்கலாம்.பிந்தைய தலைமுறையினர்க்கு அத் துன்பங்கள் தெரியவேண்டாம் எனக் கருதி அவ்வாறு செய்திருக்கலாம்.ஆனால் உண்மையை மட்டுமே வாழ்வுநெறியாகக் கொண்டு வாழ்ந்துவரும் கவிஞர் குடும்பத்தினர் வாய்மையிற்குன்றாத சான்றாண்மையாளர்கள் என்பதனை நிறுவும் வகையில் தமது குடும்பம் அடைந்த இன்னல்களையும் இழப்புகளையும் அம்மா தொகுத்துரைத்துள்ளார்கள்,வாழ்க்கை என்பது மலர்ப்படுக்கையன்று என்பதனையும் எத்தகைய இடுக்கண் வந்தாலும் கணவன்,மனைவி ஒன்றுபட்டு வாழ்ந்தால் உயர்நிலை அடையலாம் என்பதனையும் வருங்காலத் தலைமுறையினர்க்கு விளக்கும் வண்ணம் அம்மாவின் வாழ்க்கைவரலாற்று நூல் அமைந்துள்ளது.இது கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்களின் வரலாறாகவும் அம்மாவின் தன்வரலாறாகவும் ஒருங்கிணைந்து விளங்குகிறது.அம்மாவின் தன்வரலாறு கவிஞரின் குடும்பவரலாறாகவும் கவிஞரின் வரலாறு தமிழகத்தின் வரலாறாகவும் விளங்குகின்றன.
தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்களையும் அருளாளர்களையும் தலைவர்களையும் கலைஞர்களையும் அவர்களோடு கவிஞர் கொண்டிருந்த நட்பையும் அவர்கள் கவிஞர் மேல் கொண்டிருந்த பெருமதிப்பையும் பேரன்பையும் இந் நூல்வழி அறிகிறோம்.
இலங்கை,சிங்கப்பூர் என வெளிநாடுகளிலும் கவிஞர் அவர்களின் வில்லிசை பெரிதும் போற்றப்பட்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்துரைத்துள்ளார்.
கவிஞரின் மனிதநேயமும் பெரியோரைப் போற்றும் பண்பும் இளைஞர்களை ஊக்கப்படுத்தி வழிகாட்டும் அன்புள்ளமும் கட்சிச்சார்பற்று அதே நேரத்தில் அனைத்துக்கட்சிகளையும் அன்பால் ஈர்த்து நாட்டுப்பற்றும் நல்லிணக்கமும் நிலவுதற்கு உழைக்கும் பெருங்குணமும் இந் நூலில் காணப்படும் நிகழ்ச்சிகளின் மூலம் வெள்ளீடைமலையென விளக்கமாகின்றன கவிஞரின் ஆளுமைத்திறத்தை நேரடியாக விளக்காமல் இங்ஙனம் வாழ்க்கைநிகழ்ச்சிகளின் மூலம் நாம் தெரிந்துகொள்ளுமாறு நூலாசிரியர் நூலை இயற்றியுள்ள திறம் பாராட்டற்குரியது.
அறுபதாண்டுக் காலமாக ஏழாயிரம் வில்லிசைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ள கவிஞர் தமிழ்நாட்டு வரலாற்றில் சிறந்த கலைஞராக,நாட்டுப்புறக்கலையை மீட்டமைத்த சான்றோராகப் போற்றப்படுவார்.
தொன்மம்,பண்பாடு,வேளாண்மை,தேசியத்தலைவர்கள்,நாட்டுப்பற்று,அறிவியல்,மருத்துவம்,திருக்குறள்,மகாபாரதம்,இராமாயணம்,சிலப்பதிகாரம்,திருவருட்பா எனப் பல்வேறு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு தமிழர்கள் பயனடையும் வண்ணம் வில்லிசைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ள வில்லிசை வேந்தரின் பணியை அவரது மகன்,மகள்,மருமகன்,பேரன் எனக் குடும்ப உறுப்பினர்களும் தொடர்வது நமக்கு மகிழ்ச்சியையளிக்கிறது
தன்னிகரில்லாக் கவிஞரைத் தலைவராகக் கொண்டு ஓர் உரைநடைக் காப்பியமாக அவரது வாழ்க்கைவரலாற்றை வழங்கியுள்ள அம்மாவின் பணியைப் போற்றி நன்றி நவில்வோம்.
12/7/16 அன்று கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்களின் 89-ஆம் பிறந்தநாள்விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தில் நடைபெறுகிறது.இலக்கிய இணையர் இருவரையும் அவர்களது புதல்வியர்,புதல்வர்,பேரப்பிள்ளைகள் அனைவரையும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவோம்.


                                                






























2 comments :

  1. வாழ்த்துகள்!
    - அரிமா இளங்கண்ணன்

    ReplyDelete
  2. வாழ்த்துகள்!
    - அரிமா இளங்கண்ணன்

    ReplyDelete